இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியதில் மகேந்திர சிங் தோனியும் ஒருவர். கிரிக்கெட் இருக்கும்வரை தோனி பேசப்படும் அளவிற்கு பல சாதனைகளை புரிந்துள்ளார். சாதனைகள் படைத்த கிரிக்கெட் வீரர் என்பதை கடந்து தோனியின் அனைவரிடமும் எளிதில் பழகும் குணமும், எளிமையும், இவருடைய ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியமும் பலரையும் வியப்படைய செய்துள்ளது. சமீபத்தில் 41 வது பிறந்தநாள் கொண்டாடிய தோனியின் ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியத்திற்கு இந்த ஏழு உணவு பழக்கங்கள் தான் காரணம்.
வீட்டில் சமைத்த சுவையான உணவுகள் : தோனியின் ஆரோக்கியத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவருக்கு வீட்டில் சமைத்த உணவுகள் மிகவும் விருப்பம் என்பதுதான். அன்றாடம் வீட்டில் சமைக்கப்படும் உணவுகளை விரும்பி சாப்பிடுவார் தோனி. சாதம், டால், காய்கறிகள் சப்ஜி, ரொட்டி என்று உணவுகளில் பலவித ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேர்வு செய்வார். அதே நேரத்தில், அதிக கொழுப்பு மற்றும் மாவுச்சத்தை தவிர்ப்பார்.
பால் மற்றும் பால் பொருட்கள் : தோனியின் ஆரம்ப நாட்களில், ஹெலிகாப்டர் ஷாட்கள் பிரபலமாக பேசப்பட்டன. அப்போது தோனிக்கு பால் மிகவும் பிடிக்கும், பால் சம்பந்தப்பட்ட அனைத்து பொருட்களும் பிடிக்கும் என்று செய்திகள் வெளிவந்தன. அதன் தொடர்ச்சியாக தோனி ஒரு நாளைக்கு அவருடைய எனர்ஜிக்காக ஐந்து லிட்டர் பால் குடிப்பார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் அது உண்மையா இல்லையா என்று இப்போது வரை தெரியவில்லை. ஆனால் தற்போதும் பால் பொருட்கள் தோனிக்கு விருப்பம்.