மாறிவரும் வாழ்வியல் சூழலில் நமது உடல் ஆரோக்கியத்தை பற்றி நாம் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்கிற பழமொழிக்கு ஏற்ப உடல் ஆரோக்கியம் சீராக இருந்தால் தான் நமக்கு தேவையான எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த வகையில் நமது ஆரோக்கியத்தை பற்றி பெரிதும் கவலைப்படாமல் இருந்து வருகிறோம்.
ஆரம்பத்தில் அதை கவனிக்காமல் விட்டுவிட்டு உடலில் பெரிய பாதிப்பாக உருவாகிய பின் அதை பற்றி நாம் கவலைப்படுவோம். இப்படி நீண்ட காலமாக நாம் கவனிக்காமல் இருக்க கூடிய உறுப்புகளில் ஒன்று தான் கல்லீரல். நமது வாழ்நாளை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ள இந்த உறுப்பை நாம் கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. நாம் எடுத்து கொள்ளும் தேவையற்ற உணவுகள் கல்லீரலை முற்றிலுமாக சேதப்படுத்தி உயிரிழப்பு வரை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இது போன்ற ஆபத்துகளில் இருந்து நமது கல்லீரலை பாதுகாக்க அதனை சுத்தம் செய்தாக வேண்டும். இதற்கு சில பானங்கள் பெரிதும் உதவுகிறது.
காபி : சரியான அளவில் காபி குடித்து வருவதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் பல ஆய்வுகள் கூறுகிறது. காபி போதுமான அளவு எடுத்து கொளவதால் கல்லீரலில் உருவாகும் நோயைத் தடுக்க முடியும் என்று சோதனை ஆய்வுகள் காட்டுகின்றன. காபி குடிப்பதால் கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது, மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது.
நெல்லிக்காய் சாறு : இதில் அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. அத்துடன் உடல் உறுப்புகளில் வீக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். இதில் வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை நச்சுகளை வெளியேற்றி நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. சரியான அளவுகளில் நெல்லிக்காய் சாறு எடுத்து கொண்டால் கல்லீரலில் எந்தவித கட்டிகளும் உருவாகாது எனவும், நச்சுக்கள் சேராது எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பீட்ரூட் ஜுஸ் : பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நமது உணவில் அவசியம் சேர்த்து கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். இதில் ஃபோலேட், பெக்டின், பீட்டாலைன்கள் மற்றும் பீடைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் நார்ச்சத்து, மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் இதில் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் பித்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதனால் நம் உடலில் இருந்து நச்சுக் கழிவுகளை அகற்ற முடியும்.