எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளுமே வயது முதிர்வு சார்ந்தவை என பெரும்பாலான மக்கள் கருதிக் கொள்கின்றனர். குறிப்பிட்ட வயதை எட்டும்போது இதுபோன்ற பிரச்சினைகள் தங்களுக்கு வந்தே தீரும் என்று மனதில் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்களா? நம்மை சுற்றியுள்ள பெரியவர்கள் பலர் எந்தவித உடல் உபாதைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்டு நாம் ஆச்சரியம் கொள்வோம்.
ஆகவே, வயதுக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பெரிய அளவில் தொடர்பு இல்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக, நாம் கடைப்பிடிக்கும் தவறான வாழ்வியல் முறைகளை நமக்கு பல சிக்கல்களை கொண்டு வந்து தரும் என்பதை புரிந்து கொள்வது அவசியம். அவற்றில் முக்கியமான தவறுகள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
புகைபிடிப்பது : புகைபிடிக்கும் நபர்களின் உடலின் தசைகளில் ஆடோம் என்ற ஃப்ரீ ரேடிகல்ஸ் என்ற பொருள் தானாக உற்பத்தி ஆகும். இது உங்கள் நுரையீரலுக்கு மட்டுமல்லாமல் எலும்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும். உங்கள் எலும்புகளை கட்டமைக்கும் செல்களை இந்த ஃப்ரீ ரேடிகல்ஸ் அழித்து விடும். உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டால், அது குணமடையும் நடவடிக்கைகளை புகைப்பிடித்தல் பழக்கம் தாமதப்படுத்தும். முறிவு ஏற்பட்ட பகுதிக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் சென்று சேருவதற்கு புகையிலையின் விளைவுகள் ஒரு தடையாக அமையும்.
அதிக உப்பு சேர்ப்பது : உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொண்டால், எலும்புகளின் அடர்த்தி குறையும். உப்பில் சோடியம் அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரில் கால்சியம் வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கும். நாளொன்றுக்கு 2,300 மில்லி கிராமிற்கு குறைவான சோடியம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் என்றால் இந்த அளவு 1,500 மில்லி கிராம் மட்டுமே.
வீடுகளுக்குள் முடங்கி இருப்பது : எலும்புகள் பலமாக இருப்பதற்கு விட்டமின் டி சத்து முக்கியமானதாகும். அந்த சத்து இல்லை என்றால் நம் எலும்புகள் மெலிந்து விடும். சூரிய வெளிச்சத்தில் நம் உடல் படும்போது தான் அதிகப்படியான விட்டமின் டி சத்து நமக்கு கிடைக்கும். ஆகவே, வீடுகளுக்கு உள்ளேயே நீங்கள் முடங்கியிருக்கும் பட்சத்தில் விட்டமின் டி உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்.