இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பங்களின் உதவியால் நம்மால் ஒரு இடத்தில் இருந்தபடியே அனைத்தையும் செய்ய முடிகிறது. இதனால் ஸ்மார்ட்போன் அனைவரின் வாழ்விலும் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. மொபைல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை பலர் நினைத்துக்கூட பார்க்க விரும்புவதில்லை. மேலும், ஒரு நாளுக்கு பலமணி நேரங்கள் கூட சிலர் மொபைல்களில் நேரத்தை செலவிடுவர். குறிப்பாக இரவு நேரங்களில் மொபைல் உபயோகிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. கேம் விளையாடுவது, சீரிஸ் பார்ப்பது, சோசியல் மீடியா தளத்தில் பதிவுகளை பார்ப்பது என இரவில் நீண்ட நேரத்தை செலவிடுகின்றனர்.
ஆனால் அவ்வாறு நீண்ட நேரம் மொபைல், ஐபோட் போன்ற கேஜெட்டுகளை பயன்படுத்துவது நமது ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற கேஜெட்களிலிருந்து வரும் நீல ஒளி நம் தூக்கத்தை சீர்குலைக்கும் என்று ஏற்கனவே வெளியான ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது ஒரு புதிய ஆய்வு சில அதிர்ச்சியூட்டும் விஷயங்களை வெளியிட்டுள்ளது.
விர்ச்சுவல் ஸ்லீப் 2020 என்ற கூட்டத்தில் பகிரப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வின்படி, மாலை மற்றும் இரவு நேரங்களில் கேஜெட்களிலிருந்து வெளிப்படும் வெளிச்சத்திற்கும், மோசமான விந்தணுக்களின் தரம் ஆகியவற்றிற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், ஆரோக்கியமான ஆண் விந்து மற்றும் மலட்டுத்தன்மை ஆகியவற்றில் தொலைபேசி கதிர்வீச்சின் தாக்கம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலக மக்களில் கருவுறாமை பாதிப்பு 15 முதல் 20 சதவீதம் வரை உள்ளது. அதில் ஆண்களின் கருவுறுதல் பிரச்சனை மட்டும் இந்த விகிதத்தில் 20 முதல் 40 சதவீதம் வரை பங்களிக்கிறது என தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார் 23% ஆண்கள் மலட்டுத்தன்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மலட்டுத்தன்மைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தை இந்த தரவுகள் வெளிபடுத்தியுள்ளன. மேலும் ஆய்வின்படி, மின்னணு மற்றும் டிஜிட்டல் மீடியா சாதனங்களை பயன்படுத்துவது உடலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது.
மாலை நேரத்திற்கு பிறகு ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளின் பயன்பாடு விந்தணு இயக்கம், விந்து முற்போக்கான இயக்கம் மற்றும் விந்தணு செறிவு ஆகியவற்றைக் குறைக்கிறது. இந்த சாதனங்களிலிருந்து வெளிப்படும் குறுகிய அலைநீள ஒளிக்கு (SWL) அதிக வெளிப்பாடு இருப்பதும் கண்டறியப்பட்டது. இது இயங்காத விந்தணுக்களின் சதவீதத்தை அதிகமாக்குகிறது.
மேலும், நீண்ட நேர தூக்கம், மொத்த விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஒட்டுமொத்த முற்போக்கான இயக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எளிமையாக சொல்ல வேண்டுமானால், இந்த கேஜெட்களிலிருந்து வெளிப்படும் ஒளி தூக்கத்தை சீர்குலைத்து, விந்தணுக்கள் அவற்றின் இடங்களை அடைவதைத் தடுக்கும். இதனால் ஆண் மலட்டுத்தன்மையின் வீதம் அதிகரிக்கிறது.
ஸ்மார்ட்போன்களின் அதிகப்படியான பயன்பாடு நம் உடல் ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கதிர்வீச்சு ஒரு நபரின் டி.என்.ஏவுக்கு தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக செல்கள் தாங்களாகவே மீட்கும் திறனை இழக்கத் தொடங்குகின்றன. மேலும் கதிர்வீச்சுகள் விந்து அல்லது முட்டை உயிரணுக்குச் செல்லும் போது கருக்கலைப்புக்கு ஒரு காரணமாக மாறுகிறது. இருப்பினும், ஒருவர் கேஜெட்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என ஆய்வுகள் பரிந்துரைக்கவில்லை. ஆனால் ஒருவர் தூங்க செல்வதற்கு முன்பு அதைப் பயன்படுத்தக்கூடாது என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.