வெயில் காலம் வந்துவிட்டாலே பலரும் பயப்படும் விஷயம் வியர்வைதான். சிலருக்கு கட்டுப்படுத்த முடியாதபடி அளவுக்கு அதிகமாக வந்து ஆடைகளையே நனைத்துவிடும். சிலருக்கு அது அதிக துர்நாற்றத்தையும் வீசும். இதனால் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடத்தை உண்டாக்கும். அப்படி நம் உடல் வியர்வை துர்நாற்றத்தை உண்டாக்குவது ஏன்..? அதை தடுக்க என்ன வழிகள் என்பதே இந்த கட்டுரை.
நம் உடலானது எக்ரைன் (eccrine), அபோக்ரைன் (apocrine) என இரண்டு வகையான வியர்வையை சுரக்கிறது. இதில் எக்ரைன் என்பது உடல் முழுவதும் சுரக்கக் கூடியது. இந்த வியர்வையில் அதிக தண்ணீர் மற்றும் குறைந்த உப்பு கலந்து வரும். இது உடல் வெப்பம் மட்டுமல்லாது மன அழுத்தம், கோபம், பதட்டம், உடலுறவு, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளுக்கும் சுரக்கும் வியர்வை இதுதான்.
அபோக்ரைன் வியர்வை முடி வளர்ச்சி உள்ள இடங்களில் மட்டும் சுரக்கும். அதாவது அக்குள், தலை போன்ற உடலில் முடி வளரக் கூடிய இடங்களில் சுரக்கும். இந்த வியர்வையில் புரதச்சத்து, கார்போ ஹைட்ரேட், அம்மோனியம் போன்றவை இருக்கும். ஆனால் முடி வளரும் இடங்களில் பாக்டீரியாக்கள் இருப்பதால் அவை சத்துகளை அழித்து துர்நாற்றம் வீசும் கெமிக்கல்களாக மாறுகின்றன.