பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும் ஒன்றும். இதற்கு இளம் வயது , வயது முதிர்வு என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மரபு ரீதியாகவோ அல்லது சுகாதாரமில்லாமை காரணமாகவோ உருவாகிறது. அனால் இதை பல பெண்கள் கண்டுகொள்ளாமல் விடுவதால் இதன் பாதிப்பு அதிகரிக்கிறது. அந்த வகையில் பெண்கள் அலட்சியம் காட்டும் அறிகுறிகள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகவும் இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.
சத்தமில்லாமல் பெண்களை தாக்கும் இந்த புற்றுநோயானது பெண்களின் கர்பப்பையில் வளரும் செல் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. ஆரம்பத்தில் அறிகுறிகள் இல்லாமல் உருவாகும் இந்த புற்றுநோய் அதன் தீவிரத்தை அதிகரித்த பின்னரே அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. இதனால் பல வழக்குகள் குணப்படுத்த முடியாமல் போயுள்ளது. அப்படி ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மெல்ல மெல்ல சிகிச்சைகள் மூலம் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்க முடியும். எனவே கர்ப்பபை வாய் புற்றுநோயின் சில அறிகுறிகளை தெரிந்துகொண்டால் ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை அளிக்க உதவியாக இருகும். அவை என்னென்ன பார்க்கலாம்.
அதிகப்படியான உதிரப்போக்கு : இதுதான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் முதல் அறிகுறியாகும். புற்றுநோய் செல்கள் கர்ப்பையை சுற்றிலும் வளரத் தொடங்கினால் முதலில் சீரற்ற மாதவிடாய் அறிகுறிகளை வெளிப்படுத்தும் அல்லது அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை உண்டாக்கும். இது பிசிஓஎஸ் அல்லது ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும் அதிக உதிரப்போக்கை தரலாம். எனவே எதுவாயினும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் மகப்பேறு மருத்துவரை அனுகி உரிய சிகிச்சை எடுப்பது நல்லது.
உடலுறவுக்குப் பின் உதிரப்போக்கு : உடலுறவு புணர்ச்சிக்குப் பின் உங்களுக்கு இரத்தம் உதிர்வு அல்லது சிறு துளி இரத்தம் வந்தாலும் அதை சாதாரணமாக எடுக்க வேண்டாம். சில நேரங்களில் அது சரும எரிச்சல் , வெஜைனாவில் அதிக அழுத்தம், பாலியல் தொற்று, வெஜைனா வறட்சி போன்ற காரணங்களாலும் இரத்தம் வரலாம். அதேசமயம் அது கர்ப்பப்பை வாய் புற்றுநோயாகவும் இருக்கலாம். இதில் உதிரப்போக்குடன் இதுவரை இல்லாத அளவுக்கு வலியும் இருக்கும். எனவே அசௌகரியமாக உணர்தல், அதிக வலி , உதிரப்போக்கு இருந்தால் அதை சாதாரணமாக எடுக்க வேண்டாம். உடனே மருத்துவரை பார்ப்பது நல்லது.
அதிகமாக வெள்ளை படுதல் : வெள்ளைப்படுதல் என்பது பெண்களுக்கு பொதுவாக வரக்கூடியதுதான். இது சாதாரண விஷயம்தான். இருப்பினும் அது எந்த அளவுக்கு சுரக்கிறது என்பதை பொறுத்தே முடிவு செய்ய முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் வெள்ளைப்படுதல் அதிக துர்நாற்றத்தை வீசக்கூடும். பீரியட்ஸ் போன்று வெள்ளைப்படுதல் இருக்கும். பிங்க், பிரவும், இரத்தம் போன்ற நிறத்தில் வெள்ளைப்படுதல் இருந்தால் அதுவும் சாதாரண விஷயம் இல்லை. உடனே மருத்துவரை அணுகுதல் நல்லது.
அடிமுதுகில் வலி : அடிமுதுகு வலி பெண்களை பொதுவாக பாதிக்கும் பிரச்சனைதான். இது மாதவிடாய் சமயத்திலும் பெண்கள் அனுபவிக்கக் கூடும். அதேசமயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதிகமாக அடி முதுகு வலியால் அவதிப்படக்கூடும். இது பெரும்பாலும் புற்றுநோய் அதன் வீரியத்தை அடையும்போதுதான் உண்டாகும்.
உடல் எடை குறைதல் : எதிர்பாராத விதமாக திடீரென உங்கள் உடல் எடை குறையும். நீங்கள் எவ்வித உடற்பயிற்சி, டயட் ஃபாலோ செய்யாமலே உடல் எடை குறையும். இது நல்ல விஷயம்தானே என சாதாரணமாக இருக்காதீர்கள். இதுவும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகளில் ஒன்றாகும். புற்றுநோய் செல்கள் அதிகரிக்கும்போது பசியின்மை இருக்கும். இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். இதன் காரணமாக உடல் எடையும் குறையும். எனவே பசியின்மை, உடல் எடை குறைதல் இவை இரண்டையும் சாதாராணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.