கொரோனா தடுப்பூசி குறித்த பாதுகாப்பும் , விழிப்புணர்வு பற்றியும் தினமும் எங்கோ ஓர் இடத்தில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். அறிவிலாளர்களும் தடுப்பூசி குறித்த ஆய்வுகள், பக்கவிளைவுகளை கண்டறிய தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளும் , கட்டுக்கதைகளும் பரவிக்கொண்டுதான் இருக்கிறது. இது கொரோனாவை விட மிக வேகமாக பரவுகிறது என்பதே உண்மை. அந்த வகையில் மக்களிடம் வேகமாக பரவி வரும் தடுப்பூசி குறித்த வந்தந்திகளும்... உண்மைகளும் என்ன என்பதை பார்க்கலாம்.
தடுப்பூசி குறித்த ஆய்வு சோதனைகள் நடக்கும்போது தடுப்பூசி போடக்கூடாது : பல ஆண்டுகளாக தடுப்பூசி என்பது பல கட்ட சோதனைகளுக்குப் பின்னரே ஒப்புதல் பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்பது உண்மைதான் என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இந்த அவசரத் தேவையும் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதேசமயம் இதுவும் பல கட்ட சோதனைகளை செய்து , மனிதனுக்கு எந்தவித கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்த பின்னரே போடப்பட்டுள்ளது. பாதுகாப்பற்றது என கூறும் அதேசமயம்தான் இந்த தடுப்புசியானது இந்தியாவின் லட்சக்கணக்கான மக்களை தொற்றிலிருந்து பாதுகாத்துள்ளது. அவர்கள் இன்று நலமுடமும் இருக்கிறார்கள். இதன் பக்கவிளைவுகள் குறித்த ஆய்வுகள், சோதனைகள் குறித்து அறிய சுகாதார வல்லுநர்கள் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனவே தடுப்பூசி குறித்த பாதுகாப்பு மற்றும் அதன் செயல் திறன் குறித்து சந்தேகிக்க வேண்டாம்.
தடுப்பூசி குழந்தையின்மை மற்றும் பாலியல் பிரச்னைகளை உண்டாக்கும் : ஒருவரின் இனப்பெருக்க மற்றும் பாலியல் செயல்பாடுகளில் பாதிப்பை உண்டாக்கும் என்று கூறுவது தடுப்பூசி மீதான பயத்தை அதிகரிக்கின்றன. கோவிட் -19 தடுப்பூசிகள் ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை பாதிக்கும், பாலியல் உறுப்புகளை அழிக்கும், ஆண்மையின்மைக்கு வழிவகுக்கும் அல்லத மாதவிடாயில் சிக்கலை உண்டாக்கும் என்று பல வதந்திகள் மக்களை அச்சமூட்டும் வகையில் பரவி வருகிறது. சிலர் இனப்பெருக்கம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் கோவிட் -19 தடுப்பூசிகளை தவிர்க்கின்றனர். ஆனால் இவை எதர்க்கும் எந்தவித ஆய்வுகளோ , சான்றுகளோ இல்லை. இது தொற்றை அழிக்க நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குமே தவிர பாலியல் வாழ்க்கையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதே மருத்துவர்களின் கூற்று.
தடுப்பூசி டிஎன்ஏ- வை பாதிக்கும் : இந்த கூற்றும் முற்றிலும் தவறானது. சாத்தியமில்லாதது. அதாவது பலரும் பேசுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செயற்கையான முறையில் தடுப்பூசி மூலம் புரதச்சத்தை அதிகரிப்பது டிஎன்ஏ-வில் பக்கவிளைவுகளை உண்டாக்கும். டிஎன்ஏ வை மாற்றிவிடும் என்பதுதான். அதுமட்டுமன்றி தடுப்பூசியில் மைக்ரோசிப்ஸ் பொருத்தப்பட்டுள்ளது கடுமையான பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்றும் தவறான தகவல்கள் வெளியாகின. ஆனால் இது சாத்தியமில்லாதது. அதுமட்டுமன்றி மரபணுக்களை மாற்றும் சக்தி தடுப்பூசிகளுக்கு இல்லை. அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாதவை.
செயற்கையை விட இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதே சிறந்தது : செயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தால் பக்கவிளைவுகள் உண்டாகும் என்னும் கூற்று மிகவும் தவறானது. இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது நல்லதுதான் என்றாலும் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இருக்காது. அந்த சமயத்தில் தடுப்பூசிகள்தான் கைக்கொடுக்கும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இறக்கும் அபாயத்தையும் தவிர்க்கிறது. எனவே தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு நல்லதுதான் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கர்ப்பிணிகள் தடுப்பூசி போடுவது கருவை பாதிக்கும் : ஆரம்ப கட்ட சோதனையில் கருத்தரிக்க நினைக்கும் பெண்கள் , கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என்று கூறியது உண்மைதான். ஆனால் சோதனையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என தெளிவான முடிவு வந்த பின் கர்ப்பிணிகள் முதல் தாய்ப்பாலூட்டும் பெண்கள் என அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என வலியுறுத்தியது. ஆனால் பலர் அது கருவை பாதிக்கும், கருக்கலைப்பு உண்டாகும், கரு வளர்ச்சி இருப்பாது என பல கட்டுக்கதைகள் பரவி வருகின்றன. ஆனால் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்ட கர்ப்பிணிகளில் அதுபோன்ற பக்கவிளைவுகள் வந்ததாக ஆதாரங்கள் இல்லை. ஆய்வுகளில் கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பிறக்கப் போகும் குழந்தைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கலாம் என்கிறது. எனவே எதுவாயினும் உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி சரியான முடிவெடுப்பது நல்லது.
கொரோனா வந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி செலுத்தத் தேவையில்லை : இதுவும் தவறாக பரவும் தகவல்தான். இப்படி எந்த தகவலும் மருத்துவர்கள் அல்லது ஆய்வாளர்கள் மூலம் வரவில்லை. அவ்வாறு கொரோனா வந்தவர்கள்தான் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்ததால்தான் கொரோனா எளிதில் தொற்றிக்கொண்டது. எனவே கொரோனா வந்து குணமடைந்தவர்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மருத்துவரின் ஆலோசனைப் பெற்று உரிய நேரத்தில் செலுத்திக்கொள்வது நல்லது.