உலகெங்கிலும் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்களின் பட்டியலில் புரோஸ்டேட்புற்றுநோய் 6ஆம் இடத்தில் இருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் பல வகை புற்றுநோய்களில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. வாழ்க்கை தரம் நாளுக்கு, நாள் மென்மேலும் மோசமடைந்து வரும் நிலையில், புரோஸ்டேட் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக புரோஸ்டேட் புற்றுநோயானாது வயது சார்ந்த நோயாக உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். புரோஸ்டேட் புற்றுநோயை விரைவாக கண்டறியும் பட்சத்தில் அதை முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் மிதமான அளவில் இருக்கும்போது கண்டறிந்தால் கூட பல ஆண்டுகளுக்கு மருந்துகளை உட்கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும்.
புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறிவதற்கான சிறப்பு வாய்ந்த அறிகுறிகள் எதுவும் இல்லை என்ற சூழலில், 45 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அவ்வபோது இதற்கான பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதிலும் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்கனவே புரோஸ்டேட் புற்றுநோய் உடைய பின்னணி கொண்டவர்களாக இருப்பின் 40 வயதில் இருந்தே பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொதுவான அறிகுறிகள் : புரோஸ்டேட் புற்றுநோயை கண்டறியும் வகையில் தனித்த அறிகுறிகள் எதுவும் தென்படாது. வழக்கமான உடல் உபாதைகளைப் போலவே இந்த அறிகுறிகள் இருக்கும். இருப்பினும், அதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் நாம் உடனடியாக தெரிந்து கொள்ளலாம். சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுவது, குறிப்பாக இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் அல்லது விந்து திரவத்தில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போதும், விந்து வெளியேற்றும்போதும் மிகுந்த வலி, இடுப்பு வலி, பின்பக்க வலி, தொடைப்பகுதிகளில் வலி போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.
சிகிச்சை முறைகள் : புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு தன்மை மற்றும் அதன் நிலையை க்ளீசன் ஸ்கோர் மற்றும் பிஎஸ்ஏ அளவுகள் என்ற ரீதியில் குறிப்பிடுகின்றனர். பாதிப்பின் தீவிரத்தன்மையை பொருத்து மருந்துகளை உட்கொள்ளுதல், அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, ஹார்மோன் குறைப்பு சிகிச்சை போன்றவற்றை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.
காரணம் மற்றும் விளைவுகள் : வயதுமுதிர்வு, மரபு ரீதியான காரணங்கள், மோசமான உணவுப் பழக்கங்கள், உடல் பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல், பாலியல் ரீதியிலான தொற்றுகள் போன்றவை இந்த நோய் ஏற்பட காரணமாகும். புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும் கூட விந்தணு உற்பத்தி மற்றும் கருத்தரித்தல் திறன் போன்றவை பாதிக்கப்படலாம்.