இன்றைக்கு உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது. அதனால் அதிகரித்துள்ள உடல் எடையை குறைப்பதுதான் இன்றைய நிலையில் பலருடைய முதல் குறிக்கோளாக இருந்து வருகிறது. உடல் எடை கூடுவதை விட, கூடிய எடையை குறைப்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். அதற்கு மிக கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. அதிலும் உடல் எடையை குறைப்பது என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் பலரிடமிருந்து பல்வேறு விதமான ஆலோசனைகள் வந்த வண்ணம் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முறைகளை சொல்லிக் கொடுப்பார்கள். உண்மையிலேயே உடல் எடையை குறைப்பதற்கு என்று பின்பற்ற வேண்டிய உணவுப் பழக்கவழக்கங்களும், உடல் எடை குறைப்பு பற்றிய பயிற்சி வகுப்புகளும் பல்வேறு இடங்களில் வழங்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்துமே அனைவருக்கும் பயனளித்ததா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
வெற்றிகரமாக உடல் எடையை குறைக்க வேண்டும் எனில் முதலில் நம்முடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அதன் பின் உடலுக்கு வேலை கொடுக்கும் வழி உடல் இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக நடைப்பயிற்சி செய்வதும் ஜாகிங் செய்வதும் உடல் எடையை குறைப்பதற்கு இன்றைக்கு பலரும் மேற்கொள்ளும் முக்கிய வழிமுறை ஆகும். அதிலும் பிரிஸ்க் வாக்கிங் எனப்படும் வேகமாக நடைபயிற்சி செய்வது இன்றைக்கு பலரும் பின்பற்றும் முறையாகிவிட்டது. ஜாகிங் செய்வது, பிரஸ் வாக்கிங் செய்வது இந்த இரண்டில் எது உடல் எடையை குறைப்பதற்கு மிக சிறந்த வழி என்ற குழப்பம் இன்று வரையும் பலரிடம் நிலவி வருகிறது.
வல்லுனர்களின் கருத்தின்படி வேகமாக நடைபயிற்சி செய்வதும் ஜாக்கிங் செய்வதும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. மேலும் இதய நோய்கள் ஏற்படாமலும், உடலின் தசைகளின் வலிமையை அதிகரிப்பது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. அதிலும் குறிப்பாக பிரிஸ்க் வாக்கிங் எனப்படும் வேகமான நடைப்பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.
வேகமாக நடைப்பயிற்சி செய்வதன் மூலம் ஒரு நிமிடத்தில் நூறு அடிகளை கடந்து இருக்க வேண்டும் என்பது குறிக்கோளாக இருக்க வேண்டும். இது ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியம் மற்றும் வயதை பொறுத்து மாறுபடலாம். ஆனால் பல்வேறு வல்லுனர்களும் வேகமாக நடைபெற்று செய்வதை ஊக்குவிக்கின்றனர். குறைந்த நேரத்தில் அதிக அளவிலான கலோரிகளை எரிப்பதற்கும் உடலில் ஸ்டாமினாவை அதிகரிப்பதற்கும் இதயத்தை ஆரோக்கியமாக்குவதற்கும் வேகமான நடைப்பயிற்சி சிறந்த வழியாகும். மேலும் இதனால் நம்முடைய மூட்டுகளுக்கும் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதை அனைவரும் பின்பற்றுவதற்கு மிகவும் எளிமையான வழியாகும்.
மற்றொரு புறம் ஜாகிங் செய்வதை பொறுத்தவரை அது கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி செய்வதை போலத்தான். வேகத்தை பொறுத்தவரை ஜாகிங் என்பது நடப்பதை விட வேகமாகவும், ஓடுவதை விட குறைவாகவும் இருக்கும் ஒரு செயல்பாடு ஆகும். ஜாக்கிங் செய்வது மிக அற்புதமான ஒரு உடற்பயிற்சி. ஆனால் இதனால் நம்முடைய மூட்டுகளில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஜாக்கிங் செய்வதால் குறைந்த நேரத்தில் அதிக கலோரிகள் எரிக்கப்படும் என்பது உண்மை என்றாலும் முறையான வார்ம்அப் இல்லாமல் ஜாகிங் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.