உடல் எடையை குறைக்க ஜாக்கிங், வாக்கிங், உடற்பயிற்சி என எதை மேற்கொண்டாலும் நன்றாக வியர்த்தால் மட்டுமே அது நல்ல ஒர்க் அவுட் என நம்பும் மனநிலை நம்மிடையே உள்ளது. வியர்வை வெளியேறுவதன் மூலமாக உடலில் உள்ள எக்ஸ்ட்ரா கலோரிகள் எரிக்கப்படுகிறதா? என்பதனை புரிந்து கொள்ள முதலில் உடலில் எப்படி வியர்க்கிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியம்.
வியர்வை என்றால் என்ன?வியர்வை என்பது வெப்பத்தினால் ஏற்படும் சூட்டை தணிக்க தனக்கு தானே உடல் செய்து கொள்ளும் ஒருவித ஒழுங்குமுறையாகும். வெப்பநிலை அதிகமாக இருக்கும் போது, நீர் மற்றும் உப்பை உடலில் உள்ள தோல் துளைகள் வழியாக வெளியிடுகிறது, இது ஆவியாகும்போது உடலுக்கு குளிர்ச்சியான உணர்வு கிடைக்கிறது. எனவே உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுவது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என நம்பி, நீங்கள் அதிகமாக ஒர்க் அவுட் செய்தால் அது நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்பது உறுதி.
வியர்வையை கலோரிகளுடன் பொருத்தி பார்ப்பது ஏன்?மக்கள் அதிக வியர்வையையும், கலோரி எரிப்பையும் தொடர்புபடுத்த, உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், வியர்க்க விறுவிறுக்க அதிகமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம். உடல் ரீதியாக சுறுசுறுப்பாகவும், ஜிம் பயிற்சியின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உடல் வலுவாகவும் இருப்பவரோ ஃபிட்டான நபர் என்ற எண்ணம் நம் அனைவருக்குள்ளும் உள்ளது.
கடுமையான வொர்க்அவுட், அல்லது உடல் சோர்வடையும் வரை உடற்பயிற்சி செய்வது என்பது எப்போதும் நல்ல உடற்பயிற்சி செய்வதைக் குறிக்காது. அதிகப்படியான உடற்பயிற்சிகள் பல குறைபாடுகள் உள்ளன, அதனால் தான் பயிற்சியாளர்கள் ஓய்வு மற்றும் ஆரோக்கியமான உணவை பரிந்துரைக்கின்றனர்.எனவே, நீங்கள் எவ்வளவு அதிகமாக வியர்க்கிறீர்களோ, அவ்வளவு விரைவாக உங்கள் எடை குறையும் என்ற தவறான கூற்றுகளை நம்ப வேண்டாம்.
வியர்வை பற்றிய உண்மை என்ன? வியர்வை நிறைந்த செயல்களின் போது கலோரிகள் எரிக்கப்படுகிறது என்றாலும், வியர்வை வைத்து கலோரிகள் எரிக்கப்படும் அளவை எடைபோடக்கூடாது என்பது நிபுணர்களின் கருத்து. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி உதவுகிறதா என்பதை தீர்மானிக்க வியர்வை ஒரு அளவு கோல் அல்ல. ஒவ்வொருவருக்கும் வியர்வை வெளியேற பல சொந்த வழிகள் உள்ளன.
வியர்வையானது மரபியல், சூழல், வயது, உடற்பயிற்சி மற்றும் எடை ஆகியவற்றால் வழிநடத்தப்படுகிறது. வியர்வை மற்றும் எடை இழப்புக்கு இடையே குறிப்பிட்ட தொடர்பு எதுவும் இல்லை. நிபுணர்களின் கருத்து படி, வியர்வை என்பது வெப்பநிலை அதிகரித்த பிறகு உங்கள் உடலை குளிர்ச்சியடைய வைக்கும் வழிமுறையாகும். வியர்வை துவாரங்கள் வேலை செய்வதை வைத்து நீங்கள் கொழுப்பை வெளியேற்றிவிட்டீர்கள் என்று எண்ணக்கூடாது. வியர்வை உண்டாக உடற்பயிற்சியல்ல, அதிக உடல் வெப்பநிலையே காரணம்.
ஆராய்ச்சியின் படி, 90 நிமிட யோகாசனம் பெண்களில் 330 கலோரிகளையும், ஆண்களில் 460 கலோரிகளையும் எரிக்க முடியும். இதற்கு உடற்பயிற்சி தான் காரணமோ தவிர வியர்வை வெளியேறுவது காரணம் அல்ல. விறுவிறுப்பான நடைப்பயணத்தின் மூலம் இதே போன்ற விளைவைப் பெறலாம். எனவே கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு பதிலாக எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளகூடிய ஒழுங்கான வாழ்க்கை முறைக்கு உங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை வியர்ப்பதால் கலோரிகள் குறையும் என்றால், ஒவ்வொரு கோடை காலத்திலும் அனைவரது உடல் எடையும் குறிப்பிட்ட அளவு குறைத்திருக்க வேண்டாமா? என்பதை சிந்தியுங்கள்.