கடந்த சில ஆண்டுகளாக யோகா செய்வதன் நன்மைகளை பலரும் அறிந்து யோகா பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கோவிட் தொற்று காலத்தில் உடல் ஆரோக்கியத்தை மருந்து மாத்திரைகள் இல்லாமல் மேம்படுத்த யோகா மற்றும் மூச்சுப் பயிற்சிகள் பெருமளவில் உதவின. அது மட்டுமில்லாமல் யோகா பயிற்சியை தினசரி செய்வது ஒரு நோய் தடுப்பு முறையாகவும் அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.
யோகா என்பது ஒரு தனிநபர் செய்யும் பயிற்சி மட்டும் கிடையாது. நீங்கள் உங்கள் பார்ட்னர் உடனோ அல்லது குடும்பத்துடன் இணைந்தோ யோகா பயிற்சியை செய்யலாம். இன்னொரு நபருடன் சேர்ந்து செய்யும் பொழுது எளிதாக செய்ய முடியாத யோகாசனங்கள் கூட வசப்பட்டு விடும். அந்த வகையில் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், பார்ட்னர் மற்றும் நண்பர்களுடன் செய்யக்கூடிய சில எளிய யோகா பயிற்சிகள் இங்கே.
விருக்ஷாசனம் (மரம்) : மிக மிக எளிமையான ஆசனப் பயிற்சி. உங்கள் தண்டுவடம் நீளவும், நேராகவும், உறுதியாகவும், போஸ்ச்சரை சரி செய்யவும் உதவும் ஆசனம் இது. ஒற்றைக் காலில் நின்று, மற்றொரு காலை தொடையில் ஊன்றி, இரண்டு கைகளையும் தலைக்கு மேல் சேர்த்து கைகூப்புவது போல நிற்க வேண்டும். இந்த போஸ் மரம் நிற்பதைப் போல இருக்கும். சிலருக்கு ஒற்றைக் காலில் நிற்பதற்கு பேலன்ஸ் செய்ய முடியாது. அவ்வாறு இருக்கும் போது, நீங்கள் இன்னொருவருடன் இணைந்து இந்த ஆசனத்தைப் பயிற்சி செய்வது முழு பலன்களைத் தரும்.
நவுகாசனம் (படகு போஸ்) : இடுப்பு, தொடை, வயறு ஆகிய பகுதிகளில் உள்ள தசைகளை வலுப்படுத்தும் ஆசனம் இது. அமர்ந்து கொண்டு, கைகளையும் கால்களை முன்புறமாக நீட்டியும், உடலை பின்புறமாக கொஞ்சம் சாய்த்தும் இருக்கும் ஆசனம் இது, பார்ப்பதற்கு உடல் படகு வடிவத்தில் இருக்கும். பேலன்ஸ் இல்லாமல் முழு உடலும் ஒரு குறிப்பிட்ட ‘V’ வடிவில் வளைந்து இருப்பதால், இந்த ஆசனத்தை சரியாக பேலன்ஸ் செய்வது கொஞ்சம் கடினம். எனவே, உங்கள் பார்ட்னருடன் அல்லது துணையுடம் எதிரெதிராகஅமர்ந்து இந்த ஆசனத்தை பேலன்ஸ் செய்து பயற்சி பெயரலாம்.
அதோ முக ஸ்வாஸாசனம் : உடலை முன்புறமாக வளைத்து செய்யப்படும் இந்த ஆசனம் மிகவும் பிரபலமானது. உடல் வளைந்த தலைகீழ் V வடிவத்தில் இருக்கும். நேராக நின்று கொண்டு, கைகளை முன்புறமாக ஸ்ட்ரெட்ச் செய்து உடலின் குனிந்து, கைகளை தரையில் ஊன்றிக் கொள்ளவும். மற்றொரு நபருடன் சேர்ந்து, இரண்டு பெறும் எதிரெதிராக நின்று இந்த ஆசனத்தை செய்யலாம்.
வீரபத்ராசனம் (வாரியார் போஸ் ) : இந்த ஆசனம், பெயருக்கேற்றார் போல, போர் வீரனின் மிடுக்கான தோற்றம் எப்படி இருக்குமோ அந்த நிலையில் இருப்பதைக் குறிக்கிறது. இதில் பல விதமான சிறு சிறு வேறுபாடுகள் உள்ளன. உங்கள் பார்ட்னருடன் இணைந்து பயிற்சி செய்யலாம். உதாரணமாக, பாகுபலி திரைபப்டத்தில் அனுஷ்காவும் பிரபாசும் இணைத்து எதிரிகளை வில்லம்புகளால் துவம்சம் செய்வதில் இந்த ஆசனங்களைக் காணலாம்!