சர்வதேச அளவில் யோகா தற்போது வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்தியர்கள் மட்டுமல்லாமல பல நாட்டினரும் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு சிறப்பான பலன்களை பெற்று வருகின்றனர். ஆண்டு தோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கியம், நோய்கள் மற்றும் முதுமை வராம்ல் தடுப்பது என பல விதத்தில் யோகாசனங்கள் நமக்கு உதவுகின்றன. யோகா ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. மூச்சு கட்டுப்பாடு, எளிய தியானம் மற்றும் மனம், உடல் மற்றும் ஆன்மாவிற்கு இடையிலான தொடர்பை எவ்வாறு மேம்படுத்துவது உள்ளிட்ட பலவற்றை யோகா கற்று தருகிறது.
ஹிமாலயன் ஐயங்கார் யோகா சென்டர், இமாச்சலபிரதேசம்: வலிமைமிக்க இமயமலைகளின் மடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹிமாலயன் ஐயங்கார் யோகா சென்டர், ஒவ்வொரு யோகா பிரியர்களும் கட்டாயம் பார்க்க மற்றும் ஆசனங்களை கற்று கொள்ள வேண்டிய இடமாகும். இந்த மையத்தில் சிறப்பான முறையில் யோகா மற்றும் தியானம் கற்று தரப்படுகிறது.
பரமார்த் நிகேதன் ஆசிரமம், ரிஷிகேஷ்: இந்தியாவில் உள்ள மற்றொரு பழைய யோகா நிறுவனம் பரமார்த் நிகேதன் ஆசிரமம் ஆகும். கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆசிரமம் 1942-ல் நிறுவப்பட்டது. மேலும் இது ரிஷிகேஷில் உள்ள மிகப்பெரிய ஆசிரமமாகும். ஆரம்பநிலை மற்றும் வல்லுநர்களுக்கு மூன்று முக்கிய வகைகளில் (வின்யாச யோகா, ஹத யோகா, யோகா நித்ரா) யோகா நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன.
தி யோகா இன்ஸ்டிடியூட், மும்பை: உலகின் பழமையான யோகா இன்ஸ்டிடியூட் என்று குறிப்பிடப்படும் இந்த மையம், கடந்த 1918 இல் ஸ்ரீ யோகேந்திராஜி அவர்களால் நிறுவப்பட்டது. 1948-ல் மும்பையின் புறநகர்ப் பகுதியான சாண்டாக்ரூஸில் நிரந்தர தளத்தில் நிறுவப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்களால் இந்த நிறுவனம் விரும்பப்பட்டாலும், அதிக ஆரவாரமின்றி அமைதியாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 பேர் இங்கே யோகா கற்று கொள்ள வருகிறார்கள்.
ஐயங்கார் யோகாஷ்ரயா, மும்பை: யோகாவை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய பிகேஎஸ் ஐயங்கார், நிறுவிய இந்த யோகா மையம் யோகா செய்யும் தனித்துவமான பாணியை கற்பிக்கிறது. இந்தியாவில் பல ஐயங்கார் யோகாஷ்ரயா நிறுவனங்கள் உள்ளன. இங்கு பெல்ட்கள் மற்றும் மர செங்கற்கள் போன்ற பல சுவாரஸ்ய பொருட்களை பயன்படுத்தி யோகா கற்பிக்கப்படுகிறது.