இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் இன்றைய டிரெண்டிங் டயட் முறையாக வளர்ந்து வருகிறது. ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் பின்பற்றி வருகின்றனர். ஏனெனில் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இந்த டயட்டரி முறையில் உணவை மூன்று வேளை அல்லாமல் பகுதி பகுதியாக பிரித்து உடலின் தேவைக்கு ஏற்ப சாப்பிடுவதே இதன் தனித்துவமாகும். இந்த டயட் முறை எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி பாதுகாப்பான முறையாகவும் இருப்பதால் பலரும் இதை பின்பற்ற முயல்கின்றனர். அந்த வகையில் 40 வயதை கடந்தவர்களும் இந்த இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் முறையை பின்பற்ற சில டிப்ஸ்.
40 வயதைக் கடந்தவர்களுக்கு மற்ற வயதினரைக் காட்டிலும் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கில் கவனம் தேவைப்படுகிறது. ஏனெனில் 40 வயதைக் கடந்ததும் அவர்களுடைய மெட்டாபாலிசம் குறையத் தொடங்குகிறது. இதனால் சில ஹார்மோன் பிரச்சனைகளையும் அவர்கள் சந்திக்க நேரிடும். எனவே உடனடியாக அவர்களி உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவது உடலளவில் மிகப்பெரிய மாற்றத்தை அளிக்கும். இதனால் பக்கவிளைவுகளையும் அனுபவிக்கலாம்.
நீண்ட நேரம் உண்ணாவிரதம் : ஃபாஸ்டிங் முறையில் நீங்கள் நீண்ட நேரம் இடைவேளை விட்டு சாப்பிடுவது சிறந்த பலன் தரும். இதனால் நீங்கள் நினைத்த இலக்கை எளிதில் அடைய முடியும். இது ஆரம்பத்தில் கடினமாக இருக்கலாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல பழகிவிடும். அதோடு உங்கள் கலோரி உட்கொள்ளும் அளவை கண்கானிக்கவும் இது சரியான முறையாகும். அதோடு நீங்கள் விரும்பிய உடல்வாகு மற்றும் ஃபிட்னஸையும் பெற முடியும்.
புரோட்டீன் சத்து : எந்த டயட் முறையாக இருந்தாலும் அதில் புரோட்டீன் சத்து மிகவும் அவசியம். இது செல்களின் வளர்ச்சிக்கும் அதன் உறுதித்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. தசைகளை வலு சேர்க்கவும் புரோட்டீன் அவசியம் தேவைப்படுகிறது. அதுமட்டுமன்றி புரதச் சத்தானது உங்களை நீண்ட நேரம் பசியின்றி முழுமையாக உணர வைக்கிறது. எனவே ஒரு நாளைக்கு உங்கள் உடலுக்கு தேவையான புரதச் சத்தை தவறாமல் எடுத்துக்கொள்வது அவசியம்.
நீரேற்றமாக இருங்கள் : உண்ணாவிரதத்தின் போது பெரும்பாலான மக்கள் தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறார்கள். இது இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் நன்மைகளைக் குறைக்கும். நீங்கள் உண்ணாவிரத நிலையில் இருக்கும்போது உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், முழுதாக உணரவும் தண்ணீர் உதவுகிறது. உண்ணாவிரதத்தின் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உண்மையில் கடுமையான நீரிழப்புக்கு வழிவகுக்கும். எனவே அடிக்கடி தண்ணீர் குடிக்கவும்.
மோசமான தூக்க முறை : மோசமான தூக்க முறைகள் இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கின் நன்மைகளை குறைக்கலாம். இதனால் மறுநாள் அதிகமான உணவை சாப்பிட முற்படுவீர்கள் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். எனவே, இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங்கை பின்பற்றும் போது உங்கள் தூக்க முறையை மேம்படுத்துவது, இந்த உணவு முறையிலிருந்து அதிக நன்மைகளைப் பெற உதவும். சரியான நேரத்தில் படுக்கைக்குச் செல்லுங்கள், சரியான நேரத்தில் எழுந்திருங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுங்கள்.