இன்று பெண்கள் இல்லாத துறையே என்னும் அளவிற்கு அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலைகளில் உள்ளனர். ஆனால் உலகெங்கிலும் உள்ள ஒரு சில நாடுகளில் மட்டுமே அதுவும் ஆசிய நாடுகளில் மட்டுமே பெண்களுக்கு மாதவிடாயிலிருந்து குணமடைவதற்கு தேவையான விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனிடையே ஆசிய நாடுகளை தவிர்த்து ஐரோப்பாவில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறை வழங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ள முதல் நாடாக ஸ்பெயின் மாறி இருக்கிறது.
மாதவிடாய் விடுப்பு மசோதாவுக்கு ஸ்பெயின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மாதவிடாய் வலியை அனுபவிக்கும் பெண் தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் ஆகும். இன்னும் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற பட வேண்டிய இந்த சட்ட வரைவு பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. எனினும் இதை கடுமையாக விமர்சித்துள்ள ஸ்பானிஷ் தொழிற்சங்கங்கள் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் அதே நேரம், ஆண் தொழிலாளர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி உள்ளன.
இந்தோனேஷியா: கடந்த 2003-ல் இந்தோனேஷியா ஒரு சட்டத்தை இயற்றியது. முன் அறிவிப்பு இன்றி பெண்களுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என்று. ஆனால் இந்த சட்டம் நடைமுறை என்று வரும் போது நிறுவனங்களின் விருப்பத்திற்கு உட்பட்டது. பல இந்தோனேஷிய நிறுவனங்கள் மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே மாதவிடாய் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதிக்கிறார்கள். ஒரு சில நிறுவனங்கள் இந்த ஒரு நாள் விடுப்பை கூட பெண் ஊழியர்களுக்கு வழங்குவதில்லை.
இந்த நிறுவனங்கள் பல ஊழியர்களுக்கு இது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லாததை பயன்படுத்தி கொள்கின்றன. பெண்களுக்கு அவர்களின் 12 நாட்கள் வருடாந்திர விடுப்புக்கு மேல் 24 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குவது பல நிறுவனங்களுக்கு செலவை அதிகரிக்கிறது. எனவே பல இந்தோனேஷிய நிறுவனங்களில் பணியமர்த்தல் கொள்கையில் பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படுகிறது.
ஜப்பான்: ஜப்பானில் மாதவிடாய் விடுப்பு தொடர்பான சட்டம், பெண்ள் தங்களுக்கு மாதவிடாய் விடுப்பு கோரினால், அவர்களுக்குத் தேவைப்படும் வரை வழங்க நிறுவனங்கள் சம்மதிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதே போல மாதவிடாய் விடுப்பின் போது பெண்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் 2020 தொழிலாளர் அமைச்சக கணக்கெடுப்பின்படி, ஜப்பானிய நிறுவனங்களில் சுமார் 30 சதவீதம் முழு அல்லது பகுதி ஊதியத்தை மாதவிடாய் விடுப்பின் போது வழங்குகின்றன. ஏறக்குறைய 6,000 நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தகுதியுள்ள தொழிலாளர்களில் வெறும் 0.9 சதவீதம் பேர் மட்டுமே மாதவிடாய் விடுப்பு எடுத்துள்ளனர்.
தென் கொரியா: தென் கொரியாவில், பெண்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியம் இல்லாத மாதவிடாய் விடுப்புக்கு உரிமை உண்டு. வழங்க மறுக்கும் நிறுவனங்களுக்கு 5 மில்லியன் வோன் ($3,910) வரை அபராதம் விதிக்கப்படும். 2004 ஆம் ஆண்டு தென் கொரியா ஆறு நாட்களில் இருந்து ஐந்து நாள் வேலை வாரத்திற்கு மாறும் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நாட்டில் 19 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மாதவிடாய் விடுமுறை எடுத்து கொள்கிறார்கள்.
தைவான்: தைவானில் வேலைவாய்ப்பு பாலின சமத்துவச் சட்டப்படி பெண்களுக்கு வருடத்திற்கு மூன்று நாட்கள் மாதவிடாய் விடுப்பை வழங்குகிறது, இது அந்நாட்டில் வழங்கப்படும் வழக்கமான நோய் விடுப்பில் 30 நாட்களில் இருந்து கழிக்கப்படாது. sick leave-ஐ போலவே, மாதவிடாய் விடுப்பில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சம்பளத்தில் 50 சதவிகிதம் மட்டுமே பெறுகிறார்கள்.
ஆஸ்திரேலியா, இந்தியா, பிரான்ஸ்... இந்த நாடுகளில் உள்ள சில நிறுவனங்கள் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க சட்டத்தால் நிர்பந்திக்கப்படும் வரை காத்திருக்கவில்லை. ஆஸ்திரேலிய பாலின சமத்துவ நிறுவனமான Victorian Women’s Trust, பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் மாதவிடாய் விடுப்பு வழங்குகிறது. இந்தியாவில் Zomato, 10 நாட்கள் மாதவிடாய் விடுப்பை வழங்குகிறது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த Cooperative La Collective நிறுவனம் தனது பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் வரை மாதவிடாய் விடுப்பு அளிக்கிறது.