

தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒரு நாள்தான் இருக்கிறது. பட்டாசு இல்லாமல் தீபாவளி இல்லை. கொரோனா தொற்றால் பட்டாசு வெடிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ஒவ்வொருவரின் மனதிலும் அந்த கட்டுப்பாடு இருக்க வேண்டும். இந்த காற்று மாசுபாடு என்பது சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனிதர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியது. குறிப்பாக குடலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் இந்த புகை மாசுபாட்டிலிருந்து தற்காத்துக்கொள்வது அவசியம். வீடுகளில் பண்டிக்காக ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஆரோக்கியத்தை பராமரிக்கும் வழிகளை பின்பற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.


உணவில் கவனம் : பண்டிகை நாட்களில் டயட்டிற்கு பலரும் லீவ் விட்டுவிடுவார்கள். அப்படி இருக்காமல் உணவில் கவனம் செலுத்துங்கள். குறைந்த அரிசி உணவு சாப்பிடுங்கள். இனிப்பு வகைகளை அளவாக சாப்பிடுங்கள். வெதுவெதுப்பான நீர் குடியுங்கள். எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாகும். இதனால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.


நீரேற்றமாக இருங்கள் : பண்டிகை கொண்டாட்டத்தில் தண்ணீர் குடிக்க மறந்துவிடாதீர்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். பழவகைகள் சாப்பிடுங்கள்.


விட்டமின் சி : ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவு அவசியம். எனவே விட்டமின் சி உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். இது காற்று மாசுபாட்டால் உண்டாகும் குடல் பாதிப்பை சரி செய்ய உதவும். செரிமானத்திற்கு உதவும்.


பாதுகாப்பாக இருங்கள் : காற்று மாசுபாடு ஒருபக்கம் இருந்தாலும் கொரோனா வைரஸ் தொற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே இருங்கள். உறவினர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை பதிவு செய்யுங்கள். இதனால் காற்று மாசுபாட்டிலிருந்தும் தப்பிக்கலாம். கொரோனாவிடமிருந்தும் தப்பிக்கலாம்.