திருமணமான ஒவ்வொரு தம்பதியரின் ஆசையும் சீக்கிரம் பெற்றோராக வேண்டும் என்பதே. சிலருக்கு இந்த ஆசை விரைவில் நிறைவேறும், சிலருக்கு சற்று தாமதமாகும். தாமதமானாலும் இந்த கனவு நிறைவேற வேண்டும் என்று தவம் கிடப்பார்கள் பெற்றோர்கள். ஆனால், இந்த ஆசை பாதி நிறைவேறிய பிறகு அதாவது கர்ப்ப காலத்தின் போது கருச்சிதைவு (Miscarriage) காரணமாக ஒரு குழந்தையை இழப்பது எந்தவொரு பெற்றோருக்கும் உணர்ச்சி ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.
குறிப்பாக அந்த கருவை சுமந்த பெண்களுக்கு அதிர்ச்சியில் இருந்து மீள்வது எளிதான விஷயம் அல்ல. குழந்தையை கர்ப்பத்தின் பாதியிலேயே இழப்பது என்பது சம்பந்தப்பட்ட தம்பதியருக்கு குறிப்பாக பெண்களுக்கு குற்ற உணர்வு, கோபம், அதிர்ச்சி, சோகம் அல்லது தோல்வி உள்ளிட்ட பல எதிர்மறை உணர்வுகளை ஏற்படுத்தலாம். எனினும் இந்த கடினமான கட்டத்தை சமாளிக்க சில வழிகள் உள்ளன.
துக்க உணர்ச்சியை வெளிப்படுத்துவது அவசியம்: கருச்சிதைவால் பாதிப்பட நபருக்குள் பலவித உணர்ச்சிகள் ஏற்படும். தனது வலி மற்றும் வேதனையை சரியாக வெளிப்படுத்த முடியாமல் போராடலாம். இந்த துரதிர்ஷ்டவச நிகழ்வுக்கு தங்கள் தலைவிதியை நினைத்து சிலர் கோபமாக இருக்கலாம் அல்லது இந்த அசம்பாவிதத்தில் தன்னுடைய பங்கும் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் நினைத்து கொள்ளலாம். மனதில் எழும் உணர்ச்சிகளை அப்படியே புதைப்பதற்கு பதில், உணர்ச்சிகளை சமாளிக்க அல்லது வெளிப்படுத்த நேரம் ஒதுக்குவதும் அவசியம்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவை நாடலாம் : கருச்சிதைவால் உணர்ச்சி ரிதியாக பாதிக்கப்பட்ட பெண் தனது அன்றாட நடவடிக்கைகளை தொடர்வது மிகவும் கடினமாகிவிடும். அன்றாட வேலைகள், சமையல், வீட்டில் பிற வேலைகள் அல்லது ஏற்கனவே இருக்கும் குழந்தைகளை கவனித்து கொள்வது போன்ற செயல்பாடுகளில் வீட்டிலிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களின் உதவியை நாடுவது சரியாக இருக்கும்.
துணையுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் : எதிர்பார்த்த குழந்தை கருவிலேயே சிதைந்து விட்டால் அதனது சுமந்த தாய் உணர்ச்சி ரீதியாக பாதிப்படைவது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவிற்கு கருச்சிதைவு என்பது குழந்தையை எதிர்பார்த்த ஆணுக்கும் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட தம்பதியர் முதலில் ஒருவருக்கொருவர் ஆதரவாக துணை நிற்பதும், உணர்ச்சி ரீதியாக ஏற்பட்டுள்ள வலியை ஒன்றாக சமாளிப்பதும், தம்பதிகள் ஒருவருக்கொருவர் செவி சாய்ப்பதும் அவசியம்.
உண்மையை உணர வேண்டும் : கர்ப்பத்திலேயே ஒரு குழந்தையை இழப்பது நம்மோடு வாழும் ஒரு நபரை இழப்பதைப் போலவே முக்கியமானது. எனவே வாழ்வில் ஒரு குழந்தை இருந்தது இப்போது விடைபெற்று விட்டது என அதன் இருப்பை ஏற்று கொள்வது முக்கியம், அது எவ்வளவு குறுகிய காலமாக இருந்தாலும் சரி. இருந்த குழந்தை இப்போது இல்லை என்ற உண்மையை உணர பாதிக்கப்பட்டவர் சிறிது காலத்தை எடுத்து கொண்டு அதனை கடந்து செல்வதற்கான சொந்த வழிகளை கண்டறிய வேண்டும். இது உடைந்த இதயத்தை அவர்களாகவே குணப்படுத்தி கொள்ள உதவும்.
குற்ற உணர்ச்சி : பெரும்பாலும் நம்முடைய சமூகத்தில் கருச்சிதைவு ஏற்பட்டால் அதற்கு கருவுற்றிருந்த தாய் தான் காரணம் என அடிக்கடி குற்றம் சாட்டப்படும். ஆனால் உண்மையில் பல சந்தர்ப்பங்களில் கருவில் உள்ள குரோமோசோமல் அசாதாரணங்களால் (chromosomal abnormalities) கருச்சிதைவுகள் நிகழ்கின்றன. இந்த சூழலில் கர்ப்பத்தில் ஏற்பட்ட அசாதாரண நிகழ்வை மாற்ற ஒரு பெண்ணால் எதுவும் செய்திருக்க முடியாது என்ற நிலையில், கருவுற்றிருந்த பெண் ஏன் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்?.