குளிர்காலம் நமக்கு இதமான உணர்வை கொடுத்தாலும் பல உடல்நலப் பிரச்சனைகளையும் தருகிறது. சுவாசப் பிரச்சனைகள், மூட்டுவலி, தசை அல்லது தோல் நோய்த்தொற்றுகளையும் இந்த குளிர்காலத்தில்தான் அதிகமாக அனுபவிக்கிறோம். அதுமட்டுமன்றி வயிற்றுப் பிரச்சனைகளும் குளிர்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். எனவேதான் வயிற்று உபாதைகளை தவிர்க்க குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் செரிமான மண்டலத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளின் சமநிலையை நிர்வகிக்க முடியும்.
எனவே, இந்த நுண்ணுயிரிகளின் சரியான சமநிலையை உறுதிசெய்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த உதவும். குடலில் காணப்படும் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் வைரஸ்கள் குடல் நுண்ணுயிரிகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே, செரிமான அமைப்பு பாதிக்கப்படும் குளிர்காலத்தில் குடலில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
சரியாக சாப்பிடுங்கள்: குளிர்காலத்தில் நன்கு சமநிலையான உணவை கடைபிடிப்பது முக்கியம். அனைத்து முக்கிய சத்துக்களையும் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். வைட்டமின் சி நிறைந்த இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணி, கேரட், பீட்ரூட் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளுங்கள். இவை குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதும் நல்லது. முட்டைக்கோஸ், கடுகு கீரைகள், முளைக்கட்டிய தானிய வகைகள், வெந்தயம் மற்றும் கீரை வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.கீரைகள் நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் குடல் இயக்கத்தை சீராக்கி செரிமானத்தை எளிதாக்கும். இதனால், நீங்கள் முழுதாக உணர்வீர்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். எனவே, இந்த உணவுகளை கடைபிடித்து, உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும்.
மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள்: இவை செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேநீர் மற்றும் சூப்கள், மூலிகை பானங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுதல் நல்லது. ஏலக்காய், ஜாதிக்காய், மஞ்சள், இஞ்சி, இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றை சூப்களில் சேர்ப்பதும் நல்லது. அதேசமயம் இவற்றை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட ஜங்க் ஃபுட் மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்க்கவும் : உங்கள் செரிமான ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பினால், நீங்கள் சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஆல்கஹால் அளவைக் குறைக்க வேண்டும். இந்த விஷயங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை சீர்குலைத்து, வயிற்று பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்கவும்: மன அழுத்தம் செரிமான அமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, யோகா, தியானம் அல்லது நடைப்பயிற்சி போன்ற பிற உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தவாறு இசை கேட்பது, சமைப்பது, புகைப்படம் எடுத்தல் , நடனமாடுவது போன்ற செயல்களையும் செய்யலாம்.