தீபாவளியை உற்சாகமாக கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வரும் நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பண்டிகை இனிப்புகள் மற்றும் விருந்துகளில் இருந்து முற்றிலும் விலகியிருக்க முடியாது. பண்டிகை நேரத்தில் நீரிழவு உள்ளவர்கள் எடுத்து கொள்ளும் பதார்த்தங்கள் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை பாதிக்க கூடும். எனவே நீரிழவு நோயாளிகள் தங்கள் பண்டிகைகால உணவுகளை கவனமுடன் எடுத்து கொள்வது முக்கியமாகிறது. விருந்துக்கு மத்தியிலும் ஆரோக்கிய உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நீரிழிவு நோயாளிகள் பண்டிகையை மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் கொண்டாட உதவும் டிப்ஸ்கள் இதோ..
முன்கூட்டியே திட்டம் : பெரும்பாலான கொண்டாட்டங்கள் உணவுகளை மையமாக கொண்டே இருக்கும் நிலையில், விருந்துகளை புறக்கணிப்பது என்பது நீரிழவு நோயாளிகளுக்கு மிகவும் சவாலான ஒன்று. விருந்தை புறக்கணிக்காமல் உணவுகளை ருசிக்க தங்கள் உணவு அட்டவணையை முன்கூட்டியே நீரிழிவு நோயாளிகள் திட்டமிடுவது நல்லது. அந்த அட்டவணையில் கலோரி வாரியான உணவுகளை சேர்த்து அதனை பின்பற்றுவது உதவியாக இருக்கும். எப்போதும் சாப்பிடும் உணவுகளுக்கு குறைந்த கலோரி விருப்பங்களை அட்டவணையில் தேர்வு செய்யலாம். ஆனால் எதை சாப்பிட்டாலும் பாதிப்புகளை ஏற்படுத்தாதவாறு கவனமாக சாப்பிடுதல் முக்கியம்.
மாற்றுகளை தேர்வு செய்யலாம் : பண்டிகை நேரத்தில் ஆரோக்கியமான உணவு முறையை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, முடிந்தவரை ஆரோக்கியமான மாற்றுகளை தேர்வு செய்வது. வீட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகள் அல்லது வெளியில் வாங்கும் இனிப்புகள் என எதுவாக இருந்தாலும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை சர்க்கரையில் செய்யப்பட்ட இனிப்புக்கு பதில் எளிதான ஆரோக்கியத்தை தரும் வெல்லத்தில் செய்யப்பட்ட தயாரிப்புகளை சாப்பிடலாம். அதே போல காரம் மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட நேரும் போது, குறைந்த அளவில் வறுக்கப்பட்ட அல்லது நல்ல தரமான கொழுப்புகளில் செய்யப்பட்ட தயாரிப்புகளை தேர்வு செய்யலாம்.
சரியான நேரத்தில் உணவு : பண்டிகை நேரத்தில் பல நீரழிவு நோயாளிகள் பொதுவாக செய்யக்கூடிய தவறு சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் உணவை தவிர்ப்பது அல்லது நீண்ட நேரம் சாப்பிடாமலே இருப்பது. ரத்தத்தில் சரியான சர்க்கரை அளவு பராமரிக்கப்படுவதை 3 வேளை உணவை குறித்த நேரத்திற்கு சாப்பிடும் பழக்கம் உறுதி செய்யும். காய்கறிகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரத மூலங்கள் அடங்கிய உணவுகளை சாப்பிடுவது சர்க்கரை அளவீடுகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தாமல் வைத்திருக்க உதவும்.
சுறுசுறுப்பு : நீரிழிவு உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவீடுகளை இயற்கையாகவே கட்டுப்படுத்த உடற்பயிற்சி சிறந்த வழி. எனவே மிதமான உடற்பயிற்சிகள் அல்லது உடல் ரீதியாக புத்துணர்ச்சி தரக்கூடிய செயல்பாடுகள் மற்றும் தசைகளுக்கு வேலை கொடுக்கும் பயிற்சிகள் இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என்பதால் பண்டிகை காலமாக இருந்தாலும் கூட உடற்பயிற்சிக்கு அரைமணி நேரமாவது ஒதுக்க வேண்டும்.