உருமாறிய கொரோனா என புதிய அவதாரம் எடுத்துள்ள இந்த வைரஸ் மீண்டும் மக்களை பீதியில் நடமாட வைத்துவிட்டது. இந்நிலையில் மக்களுக்கு அதன் அறிகுறிகள் பற்றிய விழிப்புணர்வை மீண்டும் ஆங்காங்கே காண முடிகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் உங்கள் நுரையீரலை தாக்கிவிட்டது என்பதைக் கண்டறியும் சில அறிகுறிகளை காணலாம்.
தொடர்ச்சியான இருமல் : இருமல் என்பது சாதாரண நோய் தொற்றின் அறிகுறியாகவும் இருக்கும். ஆனால் கொரோனா வைரஸாக இருப்பின் வறட்டு இருமல் இருக்கும். இதனால் தொண்டை கடுமையான வலி இருக்கும். நுரையீரலை தாக்கி தீவிரமாகும்போது அதாவது 2-3 வாரங்கள் ஆன பிறகும் இருமல் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். இவ்வாறு இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம்.
மூச்சு விடுவதில் சிரமம் : கொரோனா வைரஸ் நுரையீரலை தாக்கிவிட்டது எனில் அதன் வேலை தடைபடும். இதனால் நுரையீரலுக்கு செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபடும். நெஞ்சு வலி ஏற்படும் வாய்ப்பும் அதிகம். எனவே இந்த அறிகுறியால் பாதிக்கப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் கடுமையான நெஞ்சு வலி, மூச்சு விடுவதற்கு கடுமையான சிரமம் ஏற்பட்டால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது என எச்சரிக்கும் அறிகுறி என்கின்றனர் மருத்துவர்கள்.