தம்பதிகளாக வாழ்ந்து அந்த வாழ்க்கைக்கான அடையாளமாக ஒரு குழந்தை பிறக்கும்போது அதை வரவேற்பதில் உள்ள மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இருக்காது. இப்படியொரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன என்றால் அதைவிட வாழ்க்கையில் வேறென்ன வரம் வேண்டும்..? என்று தானே நினைக்கத் தோன்றும். அப்படி எங்கோ யாருக்கோ இரட்டை குழந்தை பிறந்த செய்தி கேட்டுக்கொண்டிருந்த காலம் போய் தினம் தினம் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.
இதற்கு IVF சிகிச்சை முறை முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதாவது சில காரணங்களால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு செயற்கையான முறையில் கருவை உருவாக்கும் IVF சிகிச்சை முறை அதிகரித்துள்ளதன் காரணமாக, ஒவ்வொரு 42 குழந்தைகளில் ஒன்று, இட்டை குழந்தைகளாக பிறக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இரட்டைக் குழந்தைகளின் பிறப்பு அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரட்டை குழந்தை பிறப்பில் இரண்டு வகைகள் உள்ளன. அதில் ஒன்று ஒத்த இரட்டை குழந்தைகள் (identical twins) அல்லது மோனோசைகோடிக் இரட்டையர்கள் (monozygotic twins) என்றும் அழைக்கின்றனர். இந்த முறையில் ஒரு விந்தணு ஒரே கருமுட்டையை பகிர்ந்து இரண்டு கருவாக உருவாகும். அவர்கள் இருவரும் ஒரே நஞ்சுக்கொடி மற்றும் ஒரே பனிக்குடப்பையை பகிர்ந்துகொள்வார்கள். இதனால் அவர்களுக்கான உணவும் பகிர்ந்தே கிடைக்கும்.
இரண்டாவது சகோதர இரட்டையர்கள் (fraternal twins) அல்லது டிசைகோடிக் இரட்டையர்கள் (dizygotic twins) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் இரண்டு கருமுட்டைகள் உருவாகி அதில் தனித்தனியே வெவ்வேறு விந்தணுக்கள் உட்செலுத்தப்படும். இந்த இரண்டும் தனித்தனி நஞ்சுக்கொடி மற்றும் பனிக்குடப்பையில் வளரும். இப்படித்தான் இரட்டையர்கள் உருவாகின்றனர். சரி இப்படி இரட்டை குழந்தை உருவாக என்ன காரணம் , யாருக்கெல்லாம் வாய்ப்பு அதிகம் என்பதை காணலாம்.
வயது : குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடிய வயதைக் கண்டந்து நீண்ட வருட முயற்சிக்குப் பின் குழந்தை பிறக்கிறது எனில் அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உண்டு. சமீப நாட்களாக 30 வயதை கடந்த பின்பே பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதால் இரட்டை குழந்தைகள் அதிகரிக்க இதுவும் காரணமாக சொல்லப்படுகிறது.
அதாவது 35 வயதுக்கு பின் பெண்களுக்கு சுரக்கும் நுண்ணறை-தூண்டுதல் ஹார்மோன் (FSH) என்று சொல்லக்கூடிய follicle-stimulating hormone (FSH) சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் கரு முட்டைகள் ஒவ்வொரு சுழற்சியிலும் முதிர்ச்சியடைகிறது. எனவே இந்த FSH சுரப்பது அதிகரிப்பதால் முட்டைகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகிறது. இதனால் இரட்டை குழந்தை பிறக்க அதிக வாய்ப்பை உருவாக்குகிறது.
செயற்கை கருத்தரித்தல் முறை : கருத்தரித்தல் மாத்திரைகள் கரு முட்டை உற்பத்தியை அதிகரிக்கும். எனவே நீங்கள் கருத்தரித்தல் சிகிச்சை முறைகளை மேற்கொள்கிறீர்கள் எனில் இரட்டை குழந்தை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கூடுதலாக மூன்று குழந்தைகள் கூட பிறக்கலாம். அது நீங்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தரித்தல் சிகிச்சை முறையை பொறுத்தது.
பொதுவாக IVF சிகிச்சையில் இரண்டு கரு முட்டையை உட்செலுத்தி இரண்டு குழந்தைகளாக உருவாகவே சிகிச்சை அளிக்கப்படும் என மகப்பேறு மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா குறிப்பிடுகிறார். “ அப்படி செய்ய காரணம் இரண்டில் ஏதாவது ஒரு கரு மட்டுமே வளர்ச்சி பெற்று ஆரோக்கியமாக வளரும். சில நேரங்களில் இரண்டு கருவுமே நன்கு வளரும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் இரட்டை குழந்தைகளாக பிறக்கின்றன. இதுவே IVF சிகிச்சையில் இரட்டை குழந்தைகள் அதிகரிக்க காரணம் “ என்று கூறுகிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா.
எடை மற்றும் உயரம் : இதை கேட்கும்போது உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இரட்டை குழந்தைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக ஆய்வுகளில் குட்டையான மற்றும் எடை குறைவான பெண்களைக் காட்டிலும் அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் 5’4” க்கு மேல் உயரம் கொண்ட பெண்களுக்கு அதிகமாக இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஹார்மோன் மாற்றம் : கருப்பையிலிருந்து சுரக்கும் ஹார்மோன்கள் மற்றும் பிட்யூட்டரி எனப்படும் மூளையில் உள்ள சிறிய சுரப்பியும் சேர்ந்து மாதவிடாய் சுழற்சியை கட்டுப்பாட்டில் வைக்கின்றன. அந்த வகையில் சாதாரணமாக மாதவிடாய் சுழற்சி என்பது 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழ்கிறது. மாதவிடாய் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அளவு அதிகரிக்கிறது. இதனால் கருப்பையின் உட்புறத்தை (the endometrium) தடிமனாக்குகிறது. அப்படி கருமுட்டை கருப்பைக் குழாயின் வழியாகச் செல்லும் போது கருவுற்றால், அது தடிமனான கருப்பைப் புறணியில் தங்கி, பிளவுபடத் தொடங்கி இரண்டு கருவாக உருவாகிறது.