புற்றுநோய் வளர்ந்து வரும் நோயாக நாடு முழுவதும் பரவி வருகிறது. அதேசமயம் இதை கண்டு பயந்து ஓடி ஒளிய அவசியமில்லை. இதை எதிர்த்துப் போராடினால் நிச்சயம் அழிக்க முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். அதற்கு ஆரம்ப நிலையிலேயே அதன் அறிகுறிகளைக் கண்டறிய வேண்டும். அப்போது அதன் பரவலை தடுத்து குணப்படுத்திவிடலாம் என்கிறனர்.
குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்கள்தான் மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணமாக்கலாம் என்கின்றனர். அந்த வகையில் பெண்களைத் தாக்கும் கருப்பை , கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளைப் பற்றிக் காணலாம்.
சீரற்ற மாதவிடாய் : பெண்கள் சீரற்ற மாதவிடாய், அடிவயிற்றில் கடுமையான வலி ஆகியவற்றை சாதாரணமாகவே அனுபவித்து வருகின்றனர். ஆனால் மாதவிடாய் அல்லாத நாட்கள் மற்றும் மாதவிடாய் நாட்களில் தொடர்ச்சியான வலி, அடிக்கடி மாதவிடாய் வருதல், சீரற்ற மாதவிடாய் இதுபோன்ற அறிகுறிகள் புற்றுநோய்க்கான அறிகுறி. அதேபோல் 7 நாட்களுக்கு மேல் மாதவிடாய் வருதல், திடமான உதிரப்போக்கு, அதிக உதிரப்போக்கு போன்றவையும் சாதாரண பிரச்னை கிடையாது. எனவே இதுபோன்ற அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை அணுகுதல் அவசியம்.
உடலுறவுக்குப் பின் இரத்தக் கசிவு : உடலுறவின் போது அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி, இரத்தக் கசிவு ஏற்படுகிறது எனில் அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். சில சமயங்களில் தொற்று, வெஜினா வறட்சி போன்றவற்றாலும் வரலாம். ஆனால் 11 சதவீதம் வழக்குகளில் இரத்தக் கசிவு புற்றுநோயாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அதை சாதாரணமாக விட்டுவிடாதீர்கள்.
மாதவிடாயின் போது வலி : பொதுவாகவே மாதவிடாயின் போது வலி அல்லது அடிவயிற்று வலி இருக்கும். ஆனால் இந்த வலியானது வயது செல்ல செல்ல குறைய ஆரம்பிக்கும். நீங்கள் திடீரென 40 வயதிற்குப் பின்பு மாதவிடாயின் போது கடுமையான வலி இருப்பின் அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். வெஜினாவில் வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தாலும் அதை தவிர்க்காமல் மருத்துவரை அணுகுதல் நல்லது.
கருப்பை அல்லது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பநிலையில் கண்டறிவது சற்று கடினம். எனவே ஒரு சில வழக்கத்திற்கு மாறான அறிகுறிகளை வைத்தே கண்டறிய முடியும். அல்லடி உங்கள் அடிவயிற்றி ஏதேனும் மாற்றம், கட்டி போன்று உருவாதல், திடீர் உடல் எடைக் குறைதல், பசியின்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை சந்தித்தல் நல்லது.
தீர்வு என்ன ? : ஒவ்வொரு பெண்ணும் 21 அல்லது 25 வயதிற்குப் பின் அடிக்கடி கருப்பை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இதனால் ஆரம்ப நிலையிலேயே எந்த நோயாக இருந்தாலும் சரி செய்ய முயற்சிக்கலாம். இந்த பரிசோதனை 65 வயது வரை செய்ய வேண்டும். குறிப்பாக குடும்பத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் கட்டாயம் இந்த பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது. இதனால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஆரம்ப நிலையிலேயே அழித்துவிடலாம்.