மெட்டபாலிசம் என்பது சாப்பிடும் உணவுகள் முறையாக செரிமானமாகி, அதிலிருந்து கிடைக்கக்கூடிய நியூட்டிரியன்ஸ் முறையாக உடலில் சேருவதாகும். உடலுக்கு தேவையான சத்துகளை உறிஞ்சி, வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மெட்டபாலிசம் வயதாகும் காலங்களில் குறையத் தொடங்கும். இது ஒரு இயற்கையான நடைமுறை என்றாலும், தவறான வாழ்க்கை முறையால் இவற்றின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, நோய்கள் ஏற்பட காரணமாகின்றன.
அதிகாலையில் எழுந்தல் : காலைப் பொழுதை நீண்டதாக மாற்றிக்கொள்ளும்போது, உங்களின் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும். அதற்கு முந்தைய நாள் இரவில் முன்கூட்டியே படுக்கைக்கு சென்று ஆழ்ந்த உறக்கத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் நீங்கள் விரைவாக எழும்போது, அன்றைய பொழுதை சரியாக திட்டமிட்டு பணிகளை புத்துணர்ச்சியுடன் மேற்கொள்வீர்கள். இந்தப் பழக்கம் உங்களின் மெட்டபாலிச முறையில் குறிப்பிடதகுந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
அலுவலகத்தில் சுறுசுறுப்பாக இருத்தல் : காலை முதல் இரவு வரை பெரும்பான்மையான நேரம் அலுவலகத்திலேயே செலவிட வேண்டியிருப்பதால், சோர்வாக உணர வேண்டியிருக்கும். மனச்சோர்வு ஏற்படும்போது எந்தவொரு வேளையையும் சிறப்பாக செய்ய முடியாது. நீங்கள் வேலைகளை சரியாக செய்ய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும். எப்போதெல்லாம் சோர்வாக இருப்பதுபோல் உணர்கிறீர்களோ, அந்த நேரத்தில் சிறிது நேரம் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டாம். அவ்வபோது வெளியே சென்று, சிறிது நேரம் ரிலாக்ஷாக இருந்து வாருங்கள். கேக் மற்றும் மிட்டாய்களை தவிர்த்து பழங்கள், ஜூஸ் ஆகியவற்றை சிற்றுண்டி நேரத்தில் எடுத்துக் கொள்வது இன்னும் சிறந்தது
உணவுமுறை : மெட்டபாலிசத்தை முறையாக பேணுவதில் உணவுமுறைக்கு முக்கிய பங்குண்டு. ஜீரணிக்கும் சக்தி மற்றும் உடலுக்கு ஆற்றலை சேமித்துக் கொடுக்க வேண்டும் என்றால், உடல் அதிகப்படியான கலோரிகளை எரிக்க வேண்டும். அதற்கேற்ற உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். புரத உணவுகளை ஜீரணிக்கவும், நார்ச்சத்து மிக்க உணவுகளை உடைக்கவும் உடலுக்கு அதிகப்படியான ஆற்றல் தேவைப்படும்போது, உணவில் சிறிதளவு மசாலா சேர்த்துக்கொண்டால், அந்த உணவுகள் எளிதாக ஜீரணமடையும். பசிக்கு ஏற்ப உண்ண பழகிக்கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி : உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டும் என்றால், உடற்பயிற்சி அத்தியாவசியமானது. நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும்போது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சி தேவைப்படும். அதனை ஈடுகட்ட உடற்பயிற்சி செய்தால், போதுமான ஆற்றல் கிடைக்கும். கலோரிகளை எரிக்கவும், தசைகள் வலிமையடைவதற்கும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அன்றாடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.