உலகளவில் வசூல் சாதனை செய்த மெகா பிளாக் பஸ்டர் திரைப்படமான பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான பிரபாஸ், தனது வருமானம் மற்றும் பிரபலத்தின் அடிப்படையில் 2015-ஆம் ஆண்டு முதல் போர்ப்ஸ் இந்தியாவின் செலிபிரிட்டி 100 (Celebrity 100) பட்டியலில் மூன்று முறை இடம் பெற்றுள்ளார்.
தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்து வரும் பிரபாஸ் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் புகழடைந்தார். தொடர்ந்து மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட பல தெலுங்கு படங்கள் இவருக்கு வெற்றியை தேடி தந்தது. இந்நிலையில் தான் வித்தியாசமான கதையம்சங்களை பிரமாண்டமான முறையில் இயக்கி வெற்றியை உறுதி செய்யும் டைரக்டர் ராஜமௌலியுடன் பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2-வில் இணைந்தார் நடிகர் பிரபாஸ்.
பாகுபலிக்கு பின் மாஸ் சூப்பர் ஹீரோ அந்தஸ்து பெற்றார் நடிகர் பிரபாஸ். இந்நிலையில் இவர் நடித்த ராதேஷ்யாம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இவர் நடிப்பில் ஆதிபுருஷ், சலார் மற்றும் ப்ராஜெக்ட் கே போன்ற சில சுவாரஸ்யமான திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. தனது கட்டுமஸ்தான உடல்வாகு மூலம் ரசிகர்களை வியக்க வைக்கிறார் நடிகர் பிரபாஸ். தனது உடல்வாகை பார்மரிக்க நடிகர் பிரபாஸ் என்னென்ன விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வொர்க்அவுட்டை என்ஜாய் செய்யும் பிரபாஸ்:வொர்க்அவுட் செய்யும் பலர் அதை ஒரு சுமையாக நினைத்து உற்சாகமின்றி செய்வார்கள். ஆனால் பிரபாஸ் என்றுமே உடற்பயிற்சிகளை கடமையே என்று செய்ய கூடியவர் அல்ல. ஒவ்வொரு நாளும் வொர்க்அவுட்ஸை அனுபவித்து செய்வார். மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்துடன் அவர் வொர்க்அவுட்களில் ஈடுபடுவதால் மனஅழுத்தம் குறைவதாக குறிப்பிட்டு இருக்கிறார் பிரபாஸ்.