இன்றைய காலத்தில் உடல் பருமன் என்பது உலக அளவில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி உடல் பருமனின் காரணமாக வருடம் தோறும் 2.8 மில்லியனுக்கும் அதிகமான உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமாக உடல் பருமனுடன் சம்பந்தப்பட்ட மற்ற ஆரோக்கிய குறைபாடுகளினாலும் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதில் இதய கோளாறுகள், டைப் 2 நீரிழிவு நோய், புற்று நோய், சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவை உள்ளடக்கம்.
எனவே முடிந்த அளவு உடல் பருமன் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது. சரியான சிகிச்சையின் மூலமும், வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுத்துவதன் மூலமும் உடல் பருமனை சரி செய்வது மட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் நம்மால் தவிர்க்க முடியும். உடல் பருமன் மூலம் என்னென்ன வழிகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.
இதயம் சம்பந்தப்பட்ட நோய் : உடல் பருமன் ஒருவருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மாரடைப்பு, இதய தமனிகளில் ஏற்படும் பிரச்சனைகள் போன்றவற்றினால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும். குறிப்பாக அதிக உடல் எடையின் காரணமாக இதயம் மற்றும் ரத்த நாளங்களில் அதிக ரத்த அழுத்தம் உண்டாகிறது. மேலும் அதிக அளவு கொழுப்பும் இருப்பதால் இவை இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாக காரணமாகின்றன.
டைப் 2 நீரிழிவு நோய் : உடல் பருமன் ஒருவருக்கு அதிகரிக்கும் போது டைப் 2 நீரிழிவு நோய் தாக்குவதற்கான அபாயமும் அதிகரிக்கிறது. உடலில் சேரும் அதிக அளவு கொழுப்பானது உடலில் இன்சுலின் எதிர்ப்பை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வைத்து விடுகிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அவை இதய கோளாறுகள், சிறுநீரக கோளாறுகள், நரம்பியல் பிரச்சனைகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சுவாச கோளாறுகள்: உடல் பருமனானது நமது சுவாசப் பாதையில் பாதிப்புகளை ஏற்படுத்தி உறக்கமின்மை, ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் இவற்றினால் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்பட்டு உறங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கடத்தப்படுவது தடை செய்யப்படுகிறது.
புற்றுநோய் : மார்பகப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கணைய புற்றுநோய் ஆகியவைகள் உடல் பருமன் உள்ளோருக்கு அதிகம் ஏற்படுகின்றன. ஆனால் உடல் பருமனுக்கும் புற்று நோய்க்கும் உள்ள தொடர்பை பற்றி இன்னமும் கூட சரியாக நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அழற்சி, ஹார்மோன் சமநிலையில் குறைபாடு, இன்சுலின் எதிர்ப்பு போன்றவை புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.
தொற்றுகள் தாக்குவதற்கான அபாயம்: உடல் பருமமானது ஒருவரின் நோய் எதிர்ப்பு திறனை வெகுவாக குறைத்து விடுகிறது இதனால் அவர் பல்வேறு நோய்த்தொற்றுக் கிருமிகளால் பாதிக்கக்கூடும் குறிப்பாக சிறுநீரக பாதையில் ஏற்படும் தொற்றுகள், காயங்களின் போது ஏற்படும் தொற்றுகள், அறுவை சிகிச்சையின் போதும் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
மூட்டு இணைப்புகளில் பிரச்சினை: உடல் பருமன் காரணமாக மூட்டு இணைப்புகள் மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள இணைப்புகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆஸ்டியோஆர்த்தரடீஸ், மூட்டு இணைப்புகளில் வலி, மூட்டுகளின் இயக்கத்தில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தி வாழ்நாள் முழுவதும் பிரச்சினைகளை உண்டாக்க கூடும்.