நமது உடலில் உள்ள தசைகள் நன்றாக வளர்வதற்கும் அவற்றில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கும் மிக முக்கியமான சத்தாக புரதச்சத்து உள்ளது. அதிலும் நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்து, உங்களது தசை வளர்ச்சியை அதிகரிக்கவோ அல்லது தசைகளை வலிமையாக்குவோ விரும்பினால் உங்கள் உடலைப் பற்றியும் அதற்கு தேவையான புரத சத்தின் அளவீடுகளை பற்றியும் நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு நபருக்கு எவ்வளவு புரதச்சத்து தேவை என்பது அவரது வயது, பாலினம் மற்றும் என்ன விதமான உடல் இயக்கங்களை மேற்கொள்கிறார் என்பது போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த காரணிகளின் அடிப்படையில் சரியான தசை வளர்ச்சிக்கு எவ்வளவு புரதச்சத்து ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும், என்ன விதமான உணவுப் பொருள்களையெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் என்பதை பற்றியும் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
இவற்றைத் தவிர எந்த நேரத்தில் நாம் புரதச்சத்தை உட்கொள்ள வேண்டும் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அனைத்தையும் சரியாக கணக்கிட்டு சரியான அளவு புரதச்சத்தை உங்களது தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக் கொண்டு சரியான அளவில் உடற்பயிற்சியை மேற்கொண்டாலே நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை மிக எளிதாக உங்களால் பெற முடியும்.
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது, தசை நார்கள் மிக நுண்ணிய அளவில் கிழிக்கப்பட்டு, அதன் பின் நம் உடலில் உள்ள புரதச்சத்தின் உதவியுடன் அவை சரி செய்யப்பட்டு தசைநார்கள் நன்றாக வளர்வதற்கு உதவுகின்றன. தசைகளை வளர்ப்பதற்காக உடற்பயிற்சி செய்யும் அனைவருக்கும் புரத சத்து மிக இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதன் மூலம் நமது உடலில் தேவையான அளவு என்சைம்கள், ஹார்மோன்கள் மற்றும் நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஆனால் மிகக் குறைவான மக்கள் மட்டுமே புரதச்சத்தை பற்றியும் அதன் அளவீடுகளை பற்றியும் மிகச் சரியான புரிதலை கொண்டுள்ளனர். சரியான அளவில் தசைகளை வளர்ப்பதற்கு எவ்வளவு புரதச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய புரிதல் பலருக்கும் கிடையாது. சராசரியாக 18 வயது கடந்த ஒருவருக்கு அவரது உடலின் ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் 18 கிராம் அளவிலான புரதச்சத்து தேவைப்படுகிறது. இது ஒரு நாளைக்கு உரிய அளவீடு ஆகும். இதுவே தசைகளை வளர்ப்பதற்காக உடற்பயிற்சி செய்யும் வீரர்களுக்கு 1 கிலோ கிராம் உடல் எடைக்கு 1.2 கிராமிலிருந்து 2.2 கிராம் வரையிலான புரதச்சத்து ஒரு நாளைக்கு தேவைப்படும்.
உங்களது தசைகளின் வலுவை அதிகரிக்கவும், அவற்றின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீங்கள் முயற்சி செய்து கொண்டிருந்தால் உங்களது ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் குறைந்தது 2 கிராம் அளவிலான புரதச்சத்தை நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உடற்பயிற்சிகளினால் தசை நார்கள் மிக நுண்ணிய அளவில் கிழிக்கப்படும் போது போதுமான அளவு புரதச்சத்து கிடைத்தால் மட்டுமே அவை மீண்டும் தங்களை புதுப்பித்துக் கொண்டு அதிக வளர்ச்சியை பெற முடியும்
இவற்றைத் தவிர எந்த நேரத்தில் நீங்கள் உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. உடற்பயிற்சி செய்து முடித்து அரை மணி நேரத்திற்குள் புரதச்சத்து அடங்கிய உணவுப் பொருட்களை உட்கொள்வது சேதம் அடைந்த தசைநார்களை சரி செய்யவும் தசைகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதேசமயம் அளவுக்கு அதிகமான புரதச்சத்தை எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் அளவுக்கு அதிகமான புரதச்சத்தை எடுத்துக் கொண்டால் அவை உங்களது உடலில் கொழுப்பாக தேங்கி விடும் அபாயம் உள்ளது.
மெலிந்த இறைச்சிகள், கோழி, மீன், முட்டை, பால் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், நட்ஸ் வகைகள் ஆகியவற்றில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதேசமயம் உங்களது தசைகள் நன்றாக வளர்வதற்கு தேவையான அளவு அமினோ அமிலங்கள் உங்கள் உடலுக்கு கிடைப்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். தசைகளை வளர்ப்பதற்கு ஒருவர் முயற்சி செய்து கொண்டிருக்கும் பட்சத்தில் தினசரி உணவில் தாவர உணவு வகைகளும் இறைச்சிகளும் சேர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்வது நல்ல முடிவுகளை தரும். தாவர உணவுகளில் பீன்ஸ், வேர்க்கடலைகள், பாதாம் பருப்புகள், சோயா ஆகியவற்றில் புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.