மூளையின் செயல்திறன் ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் நமது நினைவு திறன் சீராக இல்லையென்றால் பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக வயதான காலத்தில் அல்சைமர் நோய் போன்ற நினைவாற்றல் இழப்பு சார்ந்த நோய் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இதனால், நமக்கு நடக்க விஷயங்கள் குறித்து கூட நினைவில் வைத்துக்கொள்ள இயலாது. ஒவ்வொரு சிறிய மறதியும் காலம் செல்ல செல்ல அதிக பாதிப்பை உண்டாக்கும்.
பலருக்கும் வயதான காலத்தில் சில நொடிகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் கூட நினைவில் இருப்பதில்லை. இது போன்ற நிலை மிக மோசமான நிலை என்று கருதப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் கூறுவதாவது, "வயதான காலத்தில் சிறிதளவு நினைவாற்றல் இழப்பு வயதான செயல்முறையின் ஒரு பகுதியாகும். பெயர்கள், சமீபத்திய உரையாடல்கள், முன்பு வைத்த பொருள்கள் ஆகியவற்றை மறப்பது சாதாரண ஒன்றாக இருக்கும். ஆனால் நினைவாற்றல் பிரச்சினைகள் அன்றாட வாழ்க்கையை நிர்வகிக்கும் திறனைக் குறைக்க ஆரம்பித்தால், அதை தீவிரமாக எடுத்துக்கொண்டு உங்கள் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நரம்பியல் துறையின் ஆலோசகர் டாக்டர் நரேந்திரன் எஸ் அவர்களின் கருத்துப்படி, “நோயாளிக்கு பின்வரும் 2 உயர் மன செயல்பாடுகளான கவனம், நினைவாற்றல், இயக்கம், மொழி, பார்வை மற்றும் பார்வையில் சிக்கல் இருந்தால் மட்டுமே அது டிமென்ஷியா பாதிப்பு என்று கருதப்படுகிறது. மேலும் இது நோயாளியின் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கும். வயதான காலத்தில் லேசான கவனக்குறைவு என்பது அன்றாட வாழ்க்கையை பாதிக்காத வரையில் பெரிய ஆபத்து இல்லை.
ஆனால், டிமென்ஷியா உள்ளவர்கள் லேசான மனநிலை மாற்றங்கள், மனித தொடர்புகளில் ஆர்வம் இழப்பு, அதிக கோபம், பதட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். மேலும், பார்கின்சன் நோயாளிகளுக்கு அமைதியற்ற கால்கள், தூக்கத்தில் நடத்தை பிரச்சனை, இரவில் மோசமான கனவுகள் போன்றவற்றால் தூக்கக் கலக்கம் இருக்கும். அல்சைமர், வாஸ்குலர், பார்கின்சன் நோய், மோட்டார் நியூரான் நோய், டிஜெனரேட்டிவ் அட்டாக்ஸியாஸ் மற்றும் சிறிய எண்ணிக்கையிலான தசை நோய் வயதானவர்களுக்கு அதிக பாதிப்பை தரக்கூடியவை.
இதுகுறித்து டாக்டர் வினய் கோயல்கூறுகையில், வாரத்திற்கு சுமார் 40-60 நோயாளிகளை நியூரோடிஜெனரேடிவ் கோளாறுகளுடன் பார்ப்பதாக கூறியுள்ளார். சிறந்த நோயறிதல், சுகாதார விழிப்புணர்வு மற்றும் அதிகரித்த ஆயுட்காலம் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும் எந்தவொரு நினைவாற்றல் இழப்பும் கவனிக்கப்பட வேண்டும் என்று இவர் தனது நோயாளிகளிடம் கூறுகிறார்.
முதியோர் மருத்துவத் துறையில் நடைமுறையில், தற்போது பார்க்கும் ஒவ்வொரு 10 நோயாளிகளிலும், 3-4 நோயாளிகளுக்கு ஏதேனும் ஒரு வகையான நியூரோ டிஜெனரேட்டிவ் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் அறிந்துள்ளனர். உடல் அசைவுகளில் தாமதம், மிக நுட்பமான நினைவாற்றல் இழப்பு, நடத்தை அல்லது ஆளுமையில் மாற்றம் ஆகியவை மக்கள் தவறவிடக்கூடிய பொதுவான அறிகுறிகளாகும். ஆரம்பகால டிமென்ஷியா ஏற்பட்டால், மறதி பெரும்பாலும் வயது தொடர்பானதாகக் கருதப்படுகிறது மற்றும் மனநிலை, நடத்தையில் ஏற்படும் மாற்றங்கள் சில வாழ்க்கை அழுத்தங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
மூளை பயிற்சிகள் : இது போன்ற நினைவு திறன் இழப்பு சார்ந்த நோய்களால் ஒருவர் பாதிக்கப்பட்டால், சில மூளை பயிற்சிகளை செய்வதன் மூலம் சிறப்பாக இருக்க முடியும். இது ஒருவரை அதிக திறன் கொண்டதாக மாற்றுகிறது. மூளைப் பயிற்சிகள் மனிதனுக்கு ஊக்கமளிக்கும் திறன் கொண்டவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, சுடோகு, குறுக்கெழுத்து, புதிர்கள், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளைப் மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் வீட்டில் நிகழ்வுகளைத் திட்டமிடவும், புதிய திறன்களைக் கற்றுக்கொள்ளவும், புதிய சொற்களஞ்சியத்தைப் பயிற்சி செய்யவும், தினசரி ஏரோபிக் பயிற்சிகள் மற்றும் தியானத்தில் ஈடுபடவும் பரிந்துரைக்கின்றனர்.