கருத்தரித்தல் பிரச்சினை : கருத்தரித்தல் பிரச்சினை இருக்கும் பெண்களுக்கு தூக்கம் என்பதே சிகிச்சைகளில் ஒன்றாக அமையும். தூக்கத்திற்கும், இனப்பெருக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இருள் சூழ்ந்த சமயத்தில் நம் உடலில் சுரக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன் தான் தூக்கத்தை தூண்டுகிறது. அதேபோல, இனப்பெருக்கத்திற்கு தேவையான ஹார்மோன்களும் தூக்கத்தின் போதுதான் தூண்டப்படுகின்றன. ஆக, போதுமான தூக்கம் இல்லை என்றால் கருத்தரித்தல் பிரச்சினை உண்டாகலாம்.
ஹார்மோன்களின் சீரற்ற தன்மை : தூக்கமின்மை காரணமாக நமது மனம் புத்துணர்ச்சி அடையாது மற்றும் செயல்திறன் குறைகிறது. கருமுட்டை வெளியேறுவதற்கும் ஹார்மோன்களின் சுரப்பு மிக முக்கியமானதாகும். தூங்கும்போது கூட நம் உடல் சுறுசுறுப்பாக இயங்கும் என்ற உண்மை உங்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். தூக்கம் இல்லை என்றால் இனப்பெருக்கத்திற்கு தேவையான ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்கள் சீரற்ற நிலையை அடையும்.
கருமுட்டைகளின் தரம் குறையும் : தூங்குவதற்கான நேரத்தை தாமதப்படுத்துவதும், நம்மை சுற்றி டிவி, மொபைல் போன்ற சாதனங்களின் பயன்பாடு காரணமாக நமது மன நலன் மற்றும் உடல் நலன் பாதிக்கப்படும். டிஜிட்டல் சாதனங்களில் இருந்து வெளிவரும் ப்ளூ லைட் காரணமாக மெலடோனின் சுரப்பு தடைபடும். ஏற்கனவே குறிப்பிட்டபடி தூக்கத்தை தூண்டுகின்ற இந்த ஹார்மோன் தான் கருமுட்டை பாதுகாப்பிற்கும் வேலை செய்கிறது. ஆகவே, இது குறையும் பட்சத்தில் கருமுட்டையின் தரமும் குறையும்.
எவ்வளவு நேரம் தூக்கம் அவசியமானது : உங்கள் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாளொன்றுக்கு 6 மணி நேரம் முதல் 7 மணி நேரம் தூங்குவது அவசியமாகும். ஆனால், 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்க கூடாது. அதிகமாக தூங்குவதும் கூட கருத்தரித்தலில் சிக்கலை ஏற்படுத்தும். அதே சமயம், 7 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு கருத்தரித்தலுக்கான வாய்ப்பு 7 சதவீதம் குறைகிறது.
தூக்கத்தை மேம்படுத்துவதற்கு டிப்ஸ் : தினசரி தூங்கும் நேரம் என்பது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். தூங்கும் நேரமும், காலையில் எழும் நேரமும் வேறுபடக் கூடாது. தினசரி 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். மெல்லிய இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கங்கள் தூக்கத்தை வரவழைக்கும். வயிறு முட்ட சாப்பிட்டு தூங்கக் கூடாது.