எய்ட்ஸ் என்றாலே கொடிய நோய் என்றும் இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தாலே நம்மையும் பாதித்து விடுமோ? என்ற அச்சம் அனைவருக்கும் எழக்கூடும். குறிப்பாக இதைச் சரிசெய்வதற்கு மருந்து , மாத்திரைகள் எதுவும் இல்லையென்பதால் இந்நோய் பாதிப்பு வந்தவுடனே பலரின் மனநிலை மிகவும் மோசமடைகிறது. ஆம் எய்ட்ஸ் பாதிப்பிற்கு முக்கியமான எச்.ஐ.வி வைரஸ் மனிதர்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துவதோடு கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் உயிர்களின் பறிக்கும் செயல்களில் ஈடுபடத் தொடங்குகிறது.
இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலே நிச்சயம் இந்நோயுடன் போராட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். இதோடு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணும் போது இதன் நோயெதிர்ப்பு மண்டலத்தில் உள்ள செல்களுக்கு கிருமிகளை எதிர்த்துப்போராடத் தேவையான ஆற்றலை அளிக்கிறது. இதோடு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடிகிறது.
ஆனால் ஒரிரு ஆண்டுகளிலே இது சரியாகிவிடும் என்று சொல்ல முடியாது. எச்.ஐ.வி தொற்றின் தாக்கம் குறைய 5 முதல் 10 ஆண்டுகள் வரைக் கூட எடுக்கக்கூடும். எனவே இந்நோய் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டும். இதற்கு வெறும் மருந்துகள் மட்டும் போதாது.. ஆரோக்கியமான உணவுகள் முதல் வாழ்க்கை நடைமுறைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதோ என்னென்ன என அறிந்துக் கொள்வோம்.
எய்ட்ஸ் பாதிப்பைக் குறைக்க உதவும் வழிமுறைகள்.. சத்தான உணவுகள் : எச்.ஐ.வி பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடு குறையத் தொடங்குகிறது. எனவே இதிலிருந்து உங்களைப் பாதுகாத்து கொள்வதற்கு சத்தான உணவுகள் முக்கியமான ஒன்று. எனவே உங்களுடைய அன்றாட உணவு முறையில் காய்கறிகள், பழங்கள், கோழி, மீன், நட்ஸ், சிறு தானியங்கள் போன்றவை உபயோகிக்க வேண்டும். இவை உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக உள்ளது.
உடற்பயிற்சி அவசியம் : பொதுவாக உடற்பயிற்சி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் முக்கியமான ஒன்று. எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்யும் போது மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்க உதவியாக உள்ளது. மேலும் மனநிலையை ஒருநிலைப்படுத்துகிறது. எனவே நீங்கள் எந்தளவிற்கு உடற்பயிற்சி செய்கிறீர்களோ? அந்த அளவிற்கு உங்களது உடல் ஆரோக்கியமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகிறது.
இதோடு முக்கியமானது இந்நோய் பாதிப்பு ஏற்பட்டு விட்டதே என்று எவ்வித கவலையும் கொள்ளாமல் மனதை நிம்மதியாக வைத்திருப்பது அவசியமான ஒன்று. குறிப்பாக மன அழுத்தம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பலவீனப்படுத்துகிறது என்பதால் ஆரோக்கியமான உணவோடு நல்ல தூக்கம், மன நிம்மதியும் அவசியமான ஒன்று. யோகா அல்லது தியானம் மேற்கொள்வது, உங்கள் செல்லப்பிராணிகள் உட்பட நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரத்தைச் செலவிடுவது போன்றவை உங்கள் வாழ்க்கையிலிருந்து மன அழுத்தத்தை அடையாளம் கண்டு அகற்ற முயற்சிக்க உதவியாக உள்ளது.
மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல் : எச்.ஐ.வி பாதிப்பு இருப்பவர்கள் எந்தவொரு சூழலிலும் மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிக்கக்கூடாது. ஏனென்றால் ஆல்கஹால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. மேலும் எச்.ஐ.வி உள்ளவர்களுக்கு புற்றுநோய், இதய நோய் மற்றும் பாக்டீரியா நிமோனியா ஆகியவை புகைப்பிடிக்காதவர்களை விட அதிகம் என்று ஆய்வுகள் நிரூபிக்கின்றன.எனவே எய்ட்ஸ் பாதிப்பு உள்ளவர்கள் இதுப்போன்ற வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றினாலே, வாழ்நாளை நீடித்துக் கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.