இன்று பலர் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஏராளமான உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தவறான உணவுத் தேர்வுகள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவது, தினமும் ஒரு சில நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது போன்றவை நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
அந்த வகையில் அன்றாடம் ஒரு சில நிமிடங்கள் செலவிட்டு ஒரு சிறிய நடைபயிற்சியை மேற்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தில் பல அதிசயங்களை நிகழ்த்தும். இது உடற்பயிற்சி செய்வதற்கு சமம் என்பதால் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க பெரிதும் உதவும். இது உடல் ரீதியாக உங்களை ஃபிட்டாக வைப்பது மட்டும் அல்லாமல் மனதிற்கு தேவையான பலத்தை அளித்து, மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுபட செய்து, மன அமைதியை தருகிறது. மாலை நேரத்தில் தினமும் நடைபயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்:-
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : நடைப்பயிற்சி என்பது ஒருவகையான கார்டியோவாஸ்குலர் பயிற்சி என்பதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதோடு, ரத்த அழுத்தத்தை குறைத்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இந்த பயிற்சி அனைத்து வயதினருக்கும் ஏற்றது. தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செல்வது உங்களை பல விதமான உடல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது : தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாக்கிவிட்டால், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படுவதை ஒருவர் கண்கூடாக கவனிக்கலாம். நடைபயிற்சி செல்வதற்கு அதிக சிரமப்பட தேவையில்லை. எனினும் இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.
உடல் எடையை பராமரிக்க உதவுகிறது : நடைபயிற்சி செல்வது கலோரிகளை எரித்து வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதோடு இது தசை வளர்ச்சியை ஊக்குவித்து, ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் உதவுகிறது. உங்கள் நண்பர் அல்லது உங்களுக்கு பிடித்த செல்லப்பிராணியான நாயுடன் நடை பயிற்சி செல்வது உங்கள் அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக மாற்றும்.
நல்ல தூக்கம் பெற உதவுகிறது : உடலுக்கு தேவையான ஓய்வை தரவும், அடுத்த நாளிற்கு தயார் செய்யவும் தூக்கம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தூக்கமின்மை பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அன்றாட மாலை வேலையில் நடைபயிற்சி செல்வது உங்களை ரிலாக்ஸாக வைத்து, மன அழுத்தத்தை போக்கி இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.