சார்ஸ் கோவிட் 2 வைரஸின் 2வது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் பாதிப்பவர்களின் எண்ணிக்கை லட்சங்களைக் கடந்துள்ளதால், மக்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. நம்மை பாதுகாத்துக்கொள்வது நம் கையில் மட்டுமே இருப்பதால், வெளியில் செல்லும்போது அலட்சியம் காட்டாமல் கொரோனா வைரஸ் வழிமுறைகள் கவனமாக பின்பற்ற வேண்டும்.
அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் தற்போது 4 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நிலைமை மோசமாக இருப்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். இரட்டை முகக் கவசம் அணிவது, சமூகவிலகளை கடைபிடிப்பது ஆகியவற்றுடன் ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் தினம்தோறும் மூச்சுப்பயிற்சி, யோகா ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3 முதல் 7 நாட்களுக்குப் பிறகு தெரியவரும் என்பதால், தொடக்க அறிகுறிகளை புறம் தள்ளாமல், அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். தற்போது, பரவி வரும் கொரோனா வைரஸின் 2வது அலையில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டவருக்கு வறட்டு இருமல், சோர்வு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பருவ காய்ச்சலின் அறிகுறியாகக்கூட வறட்டு இருமல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஒருவேளை உங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால், அதனை அலட்சியப்படுத்தாமல் வீட்டில் இருக்கும் சில மூலிகைப் பொருட்களைக் கொண்டே தீர்வு காணுங்கள்.
தேன் : தேனைப் பொறுத்தவரையில் ஆன்டிஆக்சிடன்ஸ், பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் சிறந்த இயற்கை மருந்தாகும். உங்களுக்கு வறட்டு இருமல் இருந்தால் ஒரு டேபிள் டீ ஸ்பூன் தேனை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடியுங்கள். தேனை அதிகம் சேர்க்கமால் ஒரு டீ ஸ்பூன் மட்டுமே சேர்த்துக்கொள்ளுங்கள். காலை மாலை இரு வேளைகளிலும் இதனை சாப்பிட்டால் வறட்டு இருமல் தொந்தரவுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சி : வறட்டு இருமல் ஏற்படும்போது தொண்டையில் புண் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு மிகப்பெரிய தொந்தரவுகளை உண்டாக்கும். உணவுப் பொருட்கள் மற்றும் நீராகரங்களை கூட முழுமையாக சாப்பிட முடியாது. வலி அதிகளவில் இருக்கும். மிகச்சிறந்த மருத்துவப் பொருளான இஞ்சி, தொண்டைப் புண் மற்றும் எரிச்சலுக்கு சரியான தீர்வைக் கொடுக்கும். சிறிதளவு இஞ்சியை எடுத்து தட்டி, அதனை வெதுவெதுபான நீரில் கலக்கி குடிக்கலாம். கூடியவிரைவில் நல்ல முன்னெற்றம் கிடைக்கும்.
அதிமதுர பட்டை : லத்தீனில் முலேதி என அழைக்கப்படும் அதிமதுர பட்டையில் ஏராளமான மருத்துவ பயன்கள் உள்ளன. குடல்களில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதில் மிகச்சிறந்த நிவாரணியாக அதிமதுர பட்டைகள் உள்ளன. இந்த பட்டையை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து, அந்த நீரில் ஒரு டீ ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறைக் கலந்து குடித்தால் வறட்டு இருமல் ஏற்படாது.
உப்பு நீர் : தொண்டைப் பகுதியில் ஏதேனும் கிருமி தொற்று இருந்தால்கூட வறட்டு இருமல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வீட்டில் இருக்கும் உப்பை எடுத்து தண்ணீரில் கலந்து சுமார் 30 நொடிகள் அந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். காலை, மாலை என இருவேளைகளிலும் வாயை நன்கு கொப்பளித்தால், வறட்டு இருமல் சரியாகும். கிருமி தொற்று இருந்தால்கூட சரிசெய்யப்படும்.