இன்றைய தினம் கவலையும், மன அழுத்தமும் பலரை பலி வாங்கும் உயிர்கொல்லிகளாக மாறியுள்ளன. கவலைக்கு உடல் ஆரோக்கியத்திற்கும் என சம்பந்தம் இருக்கிறது என்று எண்ணி, அதை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அனதில் கவலை அதிகரிக்கும்போது பதற்றம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதுவே பல நோய்களுக்கு அடிப்படையாகும்.
அறிகுறிகளை கவனிக்கவும் : பதற்றமாக இருப்பது, நிதானம் இழந்து செயல்படுவது, மனம் நிம்மதியின்றி தவிப்பது போன்றவை கவலைகளின் அறிகுறிகள் ஆகும். இது தவிர இதய துடிப்பு அதிகரிப்பது, உயர் ரத்த அழுத்தம், வியர்ப்பது, தள்ளாடுவது, கவனச்சிதறல் ஆகியவை மிகுந்த பாதிப்புகளின் அறிகுறிகள் ஆகும். கவலை நம் உடலையும், மனதையும் பலவீனப்படுத்திவிடும். தனிமை உணர்ச்சி மற்றும் வெறுமை உணர்ச்சி ஆகியவை கவலைகளுக்கு வழிவகை செய்யும். ஆகவே, அவற்றுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
அமைதி அடையவும் : மேற்கண்ட அறிகுறிகள் உங்களிடத்தில் தென்படும்போது, தன்னைத் தானே அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உடனே மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்று கிடையாது. சில எளிமையான வீட்டு முறை பயிற்சிகளை செய்துகூட இவற்றில் இருந்து விடுபட முடியும். பதற்றம் அடையும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவது கூட கொஞ்சம் ரிலாக்ஸ் தரும் என்பதை மறந்துவிடாதீர்கள். மனதுக்கு பிடித்தமான இசையை ரசிப்பது, புத்தகம் வாசிப்பது ஆகியவை கூட மன அமைதியை தரும்.
சாமந்தி டீ அருந்தலாம்: சாமந்தி டீ தயார் செய்வதற்கு எளிமையானது. இது உடனடியாக மன அழுத்தத்தை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ரத்த சர்க்கரை இருப்பவர்களுக்கும் இது நல்ல பலனை தரும். சாமந்தி டீ நம் உடலை இளமையோடு வைத்திருக்கும். இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.
தியானம் : மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்வதைப் போன்ற புத்துணர்ச்சி வேறெதும் கிடையாது. தியானம் மற்றும் யோகா செய்கையில், நம் உடல் சாந்தம் அடைகிறது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதிகாலை பொழுதில், மிகுந்த அமைதியான சூழலில் 20 நிமிடங்கள் தியானம் செய்யலாம். இயற்கைச் சூழல் மிகுந்த இடத்தில் இதை செய்தால் மனம் தெளிவுபெறும்.
மூச்சுப்பயிற்சி : மூச்சுப்பயிற்சி செய்தால் மனதுக்கு நன்மை என்பதோடு மட்டுமல்லாமல் நம் இதயத்திற்கான ரத்த ஓட்டம் சீரடையும். பதற்றமான சூழலில், கண்களை மூடிக் கொண்டு, நான்கு, ஐந்து முறை மூச்சை இழுத்து விடவும். தியானம் மற்றும் யோகா செய்கையிலும் மூச்சுப்பயிற்சியை நீங்கள் செய்வீர்கள். அது மட்டுமன்றி பதற்றம் மிகுந்த தருணங்களில் நாற்காலியில் அமர்ந்தபடியே கூட மூச்சுப்பயிற்சி செய்யலாம்.
எண்ணெய் மசாஜ் : நாம் நுகரும் வாசனை கூட நம் மனதில் உள்ள கவலைகளை கரைக்க கூடியதாகும். அதிலும், லாவண்டர் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் நறுமனம் வீசுவதுடன், உடலுக்கும் ரிலாக்ஸ் கிடைக்கும். குறிப்பாக சருமம் இலகுவாக இருக்கும். அருகாமையில் உள்ள கடைகளில் லாவண்டர் எண்ணெய் கிடைக்காவிட்டால் ஆன்லைன் மூலமாக வாங்கி உபயோகிக்கலாம்.
ஒமேகா 3 சத்து அவசியம் : கவலைகளை குறைப்பதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்டுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. மீன், பாதாம், அவகோடா போன்றவற்றில் இந்த சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக, மலிவான விலையில் விற்பனை ஆகும் மத்தி மீன்களில் இந்த சத்து அபரிமிதமாக உள்ளது. ஒமேகா 3 சத்து நிறைந்த ஆழிவிதைகள், சப்ஜா விதைகள் ஆகியவற்றை நமது ஜூஸ்களில் சேர்த்து பருகலாம்.
சீரான உணவு : சமச்சீரான உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நம்முடைய உணவில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து ஆகியவற்றை சீராக எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் 2, 3 நாட்கள் ஏதேனும் ஒரு வகை கீரை எடுத்துக் கொள்வது நல்லது. இது தவிர ஓரிரு நாட்களுக்கு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.
தூக்கம் முக்கியம் : எது என்ன ஆனாலும், நாளொன்றுக்கு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையில் தூங்க வேண்டும். தூக்கமின்மை தான் உடல் சோர்வுக்கும், மன சோர்வுக்கும் காரணமாகும். ஆழ்ந்த தூக்கம் முக்கியம் என்னும் அதே வேளையில், நாம் தூங்கும் அறை இருள் சூழ்ந்து இருக்க வேண்டும். பகலில் தூங்குவதைக் காட்டிலும் இரவில் தூங்குவதே நல்ல பலனை கொடுக்கும்.