Hangover Home remedies : கடுமையான தலைவலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, வயிறு எரிச்சல் , கடுமையான உடல் சோர்வு என மது அருந்திய பின் மறுநாள் காலையில் பலரும் இந்த ஹாங்கோவர் அறிகுறிகளை சந்தித்திருக்கக் கூடும். ஆனால் இந்த ஹாங்கோவர் பலரையும் ’இனி மது பக்கமே போகக்கூடாது’ என என நினைக்கும் அளவுக்கு பாடாய் படுத்தும். இதற்கென எந்த மருத்துவ முறைகளும் இல்லை என்பதால் தாங்கிக்கொள்ள வேண்டிய கசப்பான சூழல்தான் உண்டு. ஆனால் உங்களுக்கே தெரியாத சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.
ஏன் ஹாங்கோவர் வருகிறது..? அளவுக்கு அதிகமான மது என்பது எப்போதுமே ஆபத்துதான். அப்படி கட்டுபாடின்றி அளவுக்கு அதிகமான மது பழக்கமே இப்படி ஹாங்கோவரில் தள்ளுகிறது. இது தொடர்ச்சியாக இருப்பின் ஹாங்கோவர் மட்டுமல்ல உயிருக்கே கூட ஆபத்தாக மாறும். எனவே எவ்வளவு மகிழ்ச்சி , கொண்டாட்டமாக இருந்தாலும் கட்டுப்பாடோடு இருப்பதே நல்லது. ஹாங்கோவரை தடுக்கும் வழிகளை பார்க்கலாம்.
வீரியம் குறைவான ஆல்கஹால் : மது தயாரிப்பில் எத்தனால் நொதித்தல், சர்க்கரைகள் ஆகியவை கார்பன் டை ஆக்சைடு மற்றும் எத்தனாலாக மாற்றப்படுகின்றன. இதுவும் ஆல்கஹால் வகையை சார்ந்தது. இவை அதிக வீரியம் கொண்டவையாகவும் இருக்கும். அப்படி அதிக வீரியம் நிறைந்த கலவைகளை கொண்ட மதுவை தவிர்ப்பது நல்லது. குறைந்த வீரியம் கொண்ட மதுவை தேர்வு செய்தால் ஹாங்கோவரை தவிர்க்கலாம்.
நீரேற்றத்துடன் இருப்பது அவசியம் : ஆல்கஹாலுக்கு உடலின் நீர்ச்சத்தை உறிஞ்சும் தன்மை அதிகம். எனவேதான் மது அருந்திய பின் அதிகமாக சிறுநீர் கழிக்கத் தோன்றும். இதனால் விரைவில் உடலை டிஹைட்ரேட் செய்துவிடும். உடலின் நீர்ச்சத்து குறைவதால் தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளை சந்திக்கிறீர்கள். எனவே மதுவுக்கு இடையிலோ அல்லது மதுவுக்கு பின் தண்ணீர் நிறைய அருந்துவது அவசியம்.
நல்ல தூக்கம் : சிலர் மதுவுக்கு பின் தூங்காமல் இருப்பார்கள். சில நேரங்களில் அதிக மது தூக்கமின்மையை ஏற்படுத்தும். அளவாக மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும். தூக்கமின்மையை எதிர்கொள்ளும்போது மறுநாள் தலைவலி, உடல்சோர்வு , வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் வரும். எனவே மதுவுக்கு பின் நல்ல தூக்கத்தை உறுதி செய்வது அவசியம்.
நல்ல காலை உணவு : ஹாங்கோவரை தடுக்க காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது அவசியம். இது உடலின் இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். ஏனெனில் சில நேரங்களில் மது, குறைவான இரத்த சர்க்கரை அளவை உண்டாக்குவதாலும் ஹாங்கோவர் அறிகுறிகளை எதிர்கொள்ள நேரிடும். இதை ஆய்வுகளும் உறுதி செய்துள்ளன. எனவே காலை உணவில் முட்டை, நட்ஸ் வகைகள், முழு தானிய உணவு, ஜிங்க் நிறைந்த உணவு , பால் சார்ந்த உணவுகள் என ஹெல்தியாக சாப்பிட்டால் ஹாங்கோவர் குறைய வாய்ப்புகள் உண்டு.
தேன் : தேன் ஹாங்கோவரை தவிர்க்க நல்லது. TOI இணையத்திற்கு பேட்டியளித்த ஆயுர்வேத மருத்துவர் எம்.பி. மணி “ மது அருந்திய பின் ஒரு மணி நேரம் கழித்து 3-4 ஸ்பூன் தேன் குடித்தால் ஆல்கஹால் வேகமாக செரிமானமடையும். இல்லையெனில் மறுநாள் காலை 1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்தால் ஹாங்கோவர் போகும்” என்று கூறியுள்ளார்.