பல் வலி, தலை வலி, வயிறு வலி போன்றவை இயல்பாக நாம் பொறுத்துக் கொள்ள இயலாத அளவுக்கு தீவிரமானதாக இருக்கும். பல்வலி நமக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். வாய் திறந்து சாப்பிட முடியாமல், பேச முடியாமல் நாம் திணற வேண்டியிருக்கும். ஈறுகளில் வீக்கம், வாய் அல்லது தாடை பகுதியில் உள்காயம், பற்சிதைவு, பற்களில் கிருமித் தொற்று, சைனஸ் தொற்று போன்றவை பல் வலிக்கு காரணமாக அமையலாம்.
பல்வலிக்கு நாம் எளிமையான சிகிச்சை முறைகளை வீட்டிலேயே மேற்கொள்ள முடியும். எனினும் பல்வலி மிக தீவிரமானதாக இருக்கிறது மற்றும் இரண்டு நாட்களுக்கு மேலாக நீடிக்கிறது என்றால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பல் வலியுடன் சேர்த்து தலைவலி, காய்ச்சல் போன்றவை இருப்பின் மருத்துவ சிகிச்சை கட்டாயமாகும்.
ஐஸ் கட்டி வைப்பது : பல் வலிக்கு ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுப்பது நிவாரணம் தரும். ஒரு பிளாஸ்டிக் கவரில் ஐஸ் கட்டியை போட்டு, தண்ணீரில் வெளியேறாதபடி மூடி விடவும். பின்னர், வலி உள்ள பக்கம் இதை வைத்து எடுக்கவும். அப்பகுதியில் உணர்வு குறைந்து வலியை மறக்கச் செய்யும். இறுதியாக நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
இரவு சாப்பிடக் கூடாத உணவுகள் : இரவில் நீங்கள் உறங்கச் செல்லும் முன்பாக குளிர்ச்சியான, கடினமான அல்லது அசிடிக் தன்மை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிலும், உங்களுக்கு ஏற்கனவே பற்சிதைவு இருக்கிறது என்றால், இந்த உணவுகள் பல் வலியை தூண்டக் கூடும். இரவில் மென்மையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இலவங்க எண்ணெய் : சாதாரணமாகவே பற்களில் இலவங்கத்தை கடித்து, மென்று அப்படியே வாய் கொப்பளிப்பது கிருமிகளில் இருந்து விடுதலை அளிக்கும். பல் வலி என்றதுமே ஒரு இலவங்கத்தை எடுத்து பெரியவர்கள் இறுக கடித்து வைத்துக் கொள்வதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில், காட்டன் அல்லது மென்மையான துணியை உருண்டை போல உருட்டி, அதன் மீது ஒன்றிரண்டு சொட்டு இலவங்க எண்ணெய் விட்டு வாயில் கடித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு 2 மணி நேர இடைவெளியில் இதே சிகிச்சையை தொடர்ந்தால் பல் வலி காணாமல் போகும்.