குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் இருமல், சளி, தும்மல் போன்றவை வருவது அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாகும். தொண்டை புண்ணிலிருந்து நிவாரணம் தரக்கூடிய சில பொதுவான வைத்தியங்கள் உள்ளன. பொதுவான இருமல் ஆரோக்கியத்திற்கு மோசமானதல்ல, சாதாரண இருமல் இயற்கையான செயலாகும், இது எரிச்சலூட்டும் தொண்டை பிரச்னைகளை சரிசெய்கிறது.
இருமல் பொதுவாக தற்காலிகமானது, அது விரைவில் சரியாகிவிடும். ஒவ்வாமை, தூசி, புகை அல்லது மாசு காரணமாக இருமல் ஏற்படலாம். இது குளிர்காலத்தில் இன்னும் அதிகமாகலாம். நீங்கள் தொண்டை புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இருமல் உண்டாகும். இந்தப் பிரச்னையை இயற்கை வைத்தியத்தால் குணமாக்கி சுவாசத்தை சீரமைக்க முடியும். இருப்பினும இந்த பிரச்னை நீண்ட காலமாக நீடித்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. இருமல் பிரச்னையை சரிசெய்யும் வீட்டு வைத்தியம் குறித்து நாம் அறிந்திருப்பது அவசியம்.
தேன் :தேன் இருமலுக்கும் ஜலசோசத்திற்கும் சிறந்த மருந்தாகும். தேனில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை புண்ணை ஆற்ற உதவும். இருமலுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஓவர்-தி-கவுண்டர் (ஓடிசி) மருந்துகளை விட தேன் சிறந்தது என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மூலிகை தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து 2 டீஸ்பூன் தேனைக் கலந்து, தினமும் இரண்டு முறை குடிக்கவும். இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கவேண்டும். இதனை வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி, இந்த கலவையை ஒரு நாளைக்கு மூன்று வேளை பருகி வர வறட்டு இருமல் குணமாகும்.
உப்பு தண்ணீர் : தொண்டை வலி வரும்போது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது வழக்கம். உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால் தொண்டை வலி மட்டும் அல்லாமல் தொண்டை அரிப்பு, சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு தரும். உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால் தொண்டை அரிப்பு மற்றும் நுரையீரல், நாசி பாதை ஆகியவற்றில் சளி உருவாக்கத்தைக் குறைக்கும். 1 கப் வெதுவெதுப்பான நீரில் 1/4 டீஸ்பூன் உப்பு கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை வாய் கொப்புளிக்கவும். இந்த முறை குழந்தைகளுக்கு சரியாக வராது என்பதால் அவர்களுக்கு கொடுப்பதைத் தவிர்க்கவும்.
இஞ்சி : இஞ்சியின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காற்றுப்பாதையில் உள்ள சவ்வுகளைத் தளர்த்தி இருமலைக் குறைக்கும். இஞ்சி தேநீர் அருந்துவது அல்லது தேன் மற்றும் கறுப்பு மிளகு சேர்த்து இஞ்சிச்சாறு உட்கொள்வது இருமலுக்கு சிகிச்சையளிக்க மிகவும் பயனுள்ள தீர்வாகும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு கோப்பை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் கற்கண்டு சேர்த்து குடித்துவர, இருமல், சளி தொல்லைகள் நீங்கும். அரை ஸ்பூன் இஞ்சிச்சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சம்சாறு, ஒரு ஸ்பூன் புதினாச்சாறு, ஒரு ஸ்பூன் தேன் ஆகிய நான்கையும் ஒன்றாகக் கலந்து தினம் மூன்று வேளை சாப்பிட்டால் இருமல், தொண்டை வலி குணமாகும். ஆனால் இஞ்சி டீ அதிகமாக குடிக்கவேண்டாம். ஏனெனில் அதனால் வயிற்று வலி அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுத்தலாம்.
மிளகுக்கீரை: மிளகுக்கீரையில் மெந்தோல் எனப்படும் ஒரு கலவை உள்ளது. அது தொண்டையில் உள்ள நரம்புகளை உணர்ச்சியடையச் செய்யும். இது தொண்டை வலி மற்றும் எரிச்சலிலிருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் மிளகுக்கீரை நெஞ்செரிச்சலைக் குறைக்க உதவும். மிளகுக்கீரை தேநீரை ஒரு நாளைக்கு 2-3 முறை சாப்பிடுவது இருமல் பிரச்னையைக் குறைக்க மிகவும் பயனுள்ள வைத்தியமாகும். மிளகுக்கீரை எண்ணெய்யை நறுமண சிகிச்சையாகவும் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் சத்துக்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.