"அப்பப்பா.. கோடை காலம் வந்தாச்சு எப்படித்தான் சமாளிக்க போகிறோமோ?" என்று கவலைப்படுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆமாங்க, கோடைகாலத்தில் பொதுவாக ஒற்றைத் தலைவலி, வியர்க்குரு, சிறுநீர் எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற பலவிதமான உடல்நல பிரச்னைகளுக்கு நாம் ஆளாகிறோம். வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பலவிதமான நீர்ச்சத்து இழப்பு, வெப்ப பக்கவாதம் போன்ற தீவிரமான பிரச்னைகளும் உண்டாகிறது.
இந்த பிரச்சனைகளை சமாளிக்க நாம் சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதுமான அளவு நீர் பருகுதல், சரியான உடைகளை தேர்ந்தெடுத்து அணிதல் மற்றும் முடிந்த அளவு மதிய வேளையில் வெளியில் செல்வதை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்றுவது வெயிலை சமாளிக்க ஓரளவு உதவக்கூடும். அதுமட்டுமல்லாமல் சமச்சீரான உணவு முறையையும் பின்பற்றுவது அவசியம். ஒருவேளை நீங்களும் கோடைகால உடல்நல பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால் உங்களுக்கான சில வீட்டு வைத்தியங்கள் இதோ.
இருமலைப் போக்கும் பேரிச்சம் பழ பால் : நீங்கள் நாள்பட்ட இருமலால் அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு இந்த வைத்தியம் உதவக்கூடும். இதற்கு ஆறு பேரீச்சம் பழங்களை எடுத்து அதனை அரை லிட்டர் பாலில் சுமார் 25 நிமிடங்கள் குறைந்த வெப்ப நிலையில் கொதிக்க விடவும். பால் கால் பங்கு ஆன பின்னர் அதனை ஓரளவு ஆற வைத்து குடிக்கவும். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
ஒற்றைத் தலைவலியை போக்கும் ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்க வேண்டிய தேவையே இருக்காது என்ற பழமொழியை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். இது ஒற்றை தலைவலிக்கும் பொருந்தும். நீங்கள் ஒற்றைத் தலைவலியால் அடிக்கடி அவதிப்பட்டு வருகிறீர்கள் என்றால் வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடவும். இது ஒற்றைத் தலைவலியை போக்குவது மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
முகப்பரு மற்றும் பிளாக் ஹெட்களை போக்கும் வெள்ளரிக்காய்: நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளில் வெள்ளரிக்காய் ஒன்று. இதில் ஏராளமான தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் சருமத்திற்கு பலவிதமான நன்மைகளை வழங்கக்கூடும். வெள்ளரிக்காயை துருவி முகம், கழுத்து மற்றும் கண் பகுதியில் தடவி வர முகப்பரு மற்றும் பிளாக் ஹெட்கள் மறையும்.
இருமலைப் போக்கும் துளசி சாறு : கடுமையான இருமலால் போராடி வருகிறீர்கள் என்றால் துளசி சாறு உங்களுக்கான சிறந்த தீர்வாக அமையும். இதற்கு துளசி சாறு மற்றும் பூண்டு சாறு ஆகியவற்றை சம அளவுகளில் எடுத்து அதில் தேவையான அளவு தேன் சேர்த்து பருகவும். இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை என பருகிவர இருமலிலிருந்து உடனடி நிவாரணம் பெறுவீர்கள்.
தலைவலியை போக்கும் தர்பூசணிப் பழம் : கோடைக் காலத்தில் உங்களுக்கு தாங்க முடியாத அளவு தலைவலி ஏற்படும் என்றால் தினமும் ஒரு கிளாஸ் தர்ப்பூசணி சாறு பருகி வாருங்கள். இது கோடைக் கால தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இது உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்களையும் வழங்குகிறது.