குதிகால் வலிக்கு, நீண்ட நேரம் சமையலறையில் நின்றபடி வேலை செய்வதும், ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவது, பொருந்தாத காலணிகள் அணிவது, உடல் பருமன், காலில் நீர் கோர்த்துக்கொள்ளும் பிரச்சனை போன்றவையும் காரணமாக இருக்கலாம். அது நாள்பட்ட வலியாக குதிகால் பின்புறத்தில் வலி, கீல்வாதம், குதிகால் எலும்பின் வளர்ச்சி, குதிகால் அடிப்பகுதியில் வலி என இருப்பின் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம். எப்போதாவது வரும் வலி எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள்.
எப்சம் உப்பு : ஒரு பாத் டப்பில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் 3 ஸ்பூன் எப்சம் உப்பை கலந்துகொள்ளுங்கள். பின் கால் பாதங்கள் மூழ்குமாறு 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும். இதை வாரம் 2 அல்லது 3 முறை செய்து வாருங்கள். இவ்வாறு செய்ய பாதத்தின் வீக்கம் குறைந்து வலி குறையும். இறுதியாக பாதங்களை வறட்சியாக விடாமல் மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.
ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற மூலப்பொருட்கள் இருப்பதால் கால் வலியை குறைக்க உதவும். எனவே ஒரு 1 1/2 கப் தண்ணீரில் கால் கப் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து சூடாக்கிக்கொள்ளுங்கள். பின் பருத்தித்துணியை அந்த தண்ணீரில் நனைத்து வலி உள்ள இடங்களில் ஒத்தடம் வையுங்கள். 20 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வாருங்கள்.
மஞ்சள் தூள் : மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் வலி நிவாரணியாக செயல்படும். எனவே 1 கப் பாலில் 1 ஸ்பூன் மஞ்சள் கலந்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் சூடேற்றுங்கள். பின் அதில் தேன் கலந்து தினமும் 2 முறை குடித்து வர ஒரத்த ஓட்டம் அதிகரித்து வலி குறையும். உங்களுக்கு குர்குமின் ஒவ்வாமை இருப்பின் இந்த வைத்தியத்தை தவிர்க்கவும். முடிந்தால் மருத்துவரை கலந்து ஆலோசித்து பின் குடிக்கலாம்.