இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் H3N2 எனப்படும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் மக்கள் இருக்கும் சூழலில், இந்த புதிய வகை வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குழந்தைகளை மட்டும் அதிகளவில் குறிவைத்து தாக்கும் இந்த வைரசை கண்டு பெற்றோர்கள் பீதியில் உள்ளனர்.
இதற்கேற்றால் போல் தான் சமீப காலங்களாக இந்த வைரஸ் தாக்கம் குழந்தைகளிடம் வேகமாக பரவுவதோடு நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாகத் தான் தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் ஏன் குழந்தைகளை மட்டும் அதிகம் தாக்குகிறது? காரணம் என்ன? தடுப்பு நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
குழந்தைகளுக்கு ஏன் H3N2 பரவ அதிக வாய்ப்புள்ளது? : குழந்தைகள் H3N2 வைரஸ் நோய் தாக்குதலுக்கு அதிகம் பாதிப்படைய முக்கிய காரணங்களில் ஒன்று அவர்களின் பலவீனமாக நோய் எதிர்ப்பு சக்தி தான். இதனால் 5 வயதிற்கு உள்பட்ட குழந்தைகள் அதிக ஆபத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் பள்ளிக்குச் செல்லும் போது, ஒரு குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து அமரும் போது மற்ற குழந்தைகளும் எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக குழந்தைகளுக்கு பருவ காலத்தில் போடக்கூடிய தடுப்பூசிகளை முறையாக செலுத்த தவறினாலும் வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த வைரஸ் தாக்குதல் குறித்த டாக்டர் அரோஸ்கரின் கூற்றுப்படி, H3N2 தடுப்பு அல்லது சிகிச்சையில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அதிகப்படியான பயன்பாடு ஆண்டிபயாடிக் எதிர்ப்பில் தான் உள்ளது என்கின்றார். இருந்த போதும் உங்கள் குழந்தைகளுக்கு அதிகப்படியான காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். இது ஒருபுறம் இருந்தாலும், சளி, இருமல் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிகரித்து வருவதால் கண்மூடித்தனமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறது இந்திய மருத்துவ சங்கம்
மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கானக் காரணம்? அதிக அளவு காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சுவாச பிரச்சனை போன்றவைகள் H3N2 இன்ப்ளுயன்ஸா வைரஸ் நோய்க்கான முக்கிய அறிகுறிகள். இந்த அறிகுறிகள் பல வாரங்களுக்கு நீடிக்கும் போது தான் மூச்சுத்திணறல், நிமோனியா மற்றும் சுவாச நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே நான்கு நாட்களுக்கு மேல் நீடித்தாலே உடனடியான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
H3N2 தடுப்பு முறைகள்: திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.
போதுமான ஓய்வு, போதுமான தூக்கம் அவசியம்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கழுவ வேண்டும்.
வருடாந்திர காய்ச்சல் தடுப்பூசியை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்.