நமது உடலுக்கு தேவையான முக்கிய சத்துக்களின் கொழுப்பு சத்து இன்றியமையாதது ஆகும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக கொழுப்பு உடலில் சேர்ந்தால், அது நன்மை அளிப்பதற்கு பதிலாக பல்வேறு விதமான உடல் பாதைகளை உண்டாக்கும். இன்றைக்கு பலரும் தமது உடலில் சேர்ந்து இருக்கும் அதிகப்படியான கொழுப்பை குறைப்பதற்கு என்னென்னமோ முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் என்ன செய்தாலும் அவர்களால் தாங்கள் நினைத்த அளவிற்கு கொழுப்பை குறைக்க முடிவதில்லை.
ஒருவரின் உடலில் கொழுப்பானது அளவுக்கு அதிகமாக சேரும் போது உடல் எடை அதிகரிப்பது, முதிர்ச்சியான தோற்றம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆகியவை ஏற்படலாம். சாதாரண நபர்களை விட உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும் நபர்கள் இரு மடங்கு இதய தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உடலில் உள்ள கொழுப்புக்களை குறைப்பதற்கும், அதிக அளவு கொழுப்பு சேராமல் இருப்பதற்கும் கடைப்பிடிக்க வேண்டிய சில எளிய வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
ஆரோக்கியமான உணவு பழக்கம் : ரொட்டி, பாஸ்டா, தானியங்கள் ஆகியவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீண்ட நேரம் பசி இல்லாமல் வைத்திருக்க உதவும். அதேபோல் இந்த உணவுப் பொருட்களை நிறைந்துள்ள நார்ச்சத்தானது கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் உதவுகிறது. இந்த செயல்முறையின் தீவிரத்தை அதிகரிக்க தினசரி உணவில் பச்சை காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக் கொண்டால் இன்னும் நல்லது.
தினசரி உடற்பயிற்சி : உடல் எடை அதிகரித்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும். எனவே சரியான உணவு பழக்க வழக்கத்தின் மூலமும், சரியான உடற்பயிற்சியின் மூலமும் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். சரியான எடையை பேணி காப்பதன் மூலம் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை உண்டாகும் வாய்ப்புகள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிறிதளவு உடல் எடையை குறைத்தாலே இதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும் : ஒருவர் அதிக அளவில் புகை பிடிக்கும் போது அவை நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்புகளையும் குறைத்து விடும். மேலும் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இவற்றுடன் நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கும் காரணமாகிறது. எனவே முடிந்த அளவு புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால் உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும் : அடிக்கடி ஆல்கஹால் உட்கொள்வது ஒருவரின் உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும். எனவே நீங்கள் மது அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் அடிக்கடி மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி மது அருந்துவதால் இதய செயலிழப்பு, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உண்டாகும். மேலும் உடலில் எச் டி எல் கொழுப்பின் அளவையும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் பல்வேறு பதிப்புகள் உண்டாகலாம்.