பட்டர் நிரம்பிய பன்னீர் கடாய் அல்லது பன்னீர் டிக்கா என்பது யாருக்கேனும் பிடிக்காமல் இருக்குமா? அதே சமயம், இதை முறையாக பயன்படுத்தும் போது அது உங்கள் உடல் எடை குறைப்பிற்கு உதவிகரமாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆக, பன்னீரில் என்னென்ன வகையான சத்துக்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றபடி உங்கள் உணவுப் பழக்க, வழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
அதிக புரதச்சத்து நிரம்பியது: ஒரு கப் லோ ஃபேட் காட்டேஜ் சீஸ்-இல் 28 கிராம் புரதம் மற்றும் 163 கலோரிகள் உள்ளன. அதிக புரதம் இருப்பதால் என்ன பயன் கிடைக்கும்? புரதம் ஜீரனம் அடைய அதிக நேரம் தேவைப்படும். அதாவது உங்களுக்கு நீண்ட நேரம் உணவு செரிமானம் ஆகாமல் இருக்கும். ஆக, ஜீரனம் அடையும் வரையிலும் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். பசி எடுக்காது. அந்த வகையில் உடல் எடையை குறைக்க இது உதவிகரமாக இருக்கும்.
கலோரி எண்ணிக்கை: 100 கிராம் பன்னீரில் 72 கலோரிகள் மட்டுமே இருக்கும். இது பிற உணவுகளைக் கணக்கிடுகையில் குறைவானது ஆகும். மேலும், இதை நீங்கள் பிற உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய தேவையில்லை. நேரடியாக இதை மட்டுமே சாப்பிட்டால் கூட போதுமானது என்பதால், குறைவான கலோரிகளுடன் பசி அடங்கி விடும். இதன் எதிரொலியாக உடல் எடையை கட்டுப்படுத்தலாம். குறிப்பாக, பன்னீரை நீங்கள் கிரில் செய்து அல்லது பேக் செய்து சாப்பிடலாம்.
கால்சியம் நிரம்பியது: பன்னீர் சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு அன்றாடம் தேவையான கால்சியம் சத்தில் 30 சதவீதம் பூர்த்தி அடைகிறது என்ற தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும். எலும்பு நலன் முதல் ஒட்டுமொத்த உடல் நலன் வரையில், கால்சியத்தின் தேவை மிக அவசியமானது. குறிப்பாக, பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் அதிக கால்சியம் சத்து தேவைப்படும். ஆக, குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கு அதிக பன்னீர் பரிமாறுவதை பெண்கள் வாடிக்கையாக கொண்டிருந்தால், அதை இனி உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மற்றவர்களைக் காட்டிலும் உங்களுக்குத் தான் கால்சியம் சத்து அதிக தேவையாகும்.
லியோனெலிக் ஆசிட்: பன்னீரில் இருக்கும் மிக முக்கியமான சத்து இதுவாகும். பொதுவாக இது இறைச்சி மற்றும் இதர பால் பொருட்களில் தான் அதிகம் இருக்கும். குறிப்பாக, தாவரங்களை உண்ணும் விலங்களின் இறைச்சியில் இந்த சத்து அதிகம் காணப்படும். உங்கள் உடலில் படிந்துள்ள கொழுப்பு படிவங்களை நீக்குவதற்கும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் லியோனெலிக் ஆசிட் மிக முக்கியமானது ஆகும்.