கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை எடுத்து கொள்வது நம் வீடுகளில் உள்ள பெரியவர்கள் எப்போதும் கொடுக்கும் பொதுவான மற்றும் முக்கிய ஆலோசனையாக இருக்கிறது. குங்குமப்பூ என்பது saffron crocus செடியிலிருந்து வரும் ஒரு மசாலா ஆகும், இது குரோகஸ் சாடிவஸ் (Crocus sativus) என்றும் அழைக்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை தினமும் உட்கொள்வது பிறக்கும் குழந்தையை அழகாக்கிறது என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. தாய்மை என்பது வாழ்க்கையை இனிமையாக மாற்றும் சிறந்த அனுபவம்.
கர்ப்பகாலத்தில் பெண்கள் தங்களது ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கர்ப்பகாலத்தில் சீரான உணவு, மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம் என்றாலும் இவற்றுக்கிடையே டயட்டில் குங்குமப்பூ இடம்பெற வேண்டும் என்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள குங்குமப்பூ கர்ப்பிணிகளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
மனநிலை மாற்றங்களை சமாளிக்க :கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் மிக பொதுவான ஒரு பிரச்னை மூட் ஸ்விங்ஸ் எனப்படும் மனநிலை மாற்றங்கள். இது விரைவான ஹார்மோன் மாற்றங்கள் அல்லது கர்ப்பத்தின் போது அனுபவிக்கும் உடல் சிரமங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. திடீரென்று பார்த்தால் மிகவும் உற்சாகமாக காணப்படும் கர்ப்பிணிகள், சில சமயம் படுக்கையில் கண்ணீருடன் காணப்படுவார்கள். இதற்கு மூட் ஸ்விங்ஸ் கோளாறே காரணம். இந்த மனநிலை மாற்றங்களை சரி செய்ய குங்குமப்பூ உதவுகிறது. கர்ப்பிணிகள் குங்குமப்பூ எடுத்து கொள்ளும் நேரங்களில் அது அவர்களது உடலில் செரோடோனின்-ஐ உற்பத்தி செய்கிறது. இது அவர்களின் உடலில்ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் மோசமான மனநிலையிலிருந்து விடுபட உதவுகிறது.
நிம்மதியாக உறங்க : ஒரு பெண் தனது பிரசவ வாழ்க்கையின் போது அனுபவிக்கும் அனைத்து உடல் உபாதைகளும் அவர்களின் தூக்கத்தை கெடுக்கின்றன. சரியாக தூங்க முடியாமல் அவர்கள் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க இரவில் தூங்கும் முன் கர்ப்பிணிகள் ஒரு டம்ளர் குங்குமப்பூ பால் குடித்து விட்டு படுத்தால், கவலை தணிக்கப்பட்டு அவர்களின் ஒட்டுமொத்த மனநிலை மேம்படுகிறது. சீரான மனநிலை அவர்களுக்கு நிம்மதியான உறக்கம் வர உதவி செய்கிறது.
தசைப்பிடிப்புகளில் இருந்து நிவாரணம் : கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு அடிக்கடி தசைபிடிப்புகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் லேசாக இருக்கும் பிடிப்பு தீவிரமாகி கடும் வலியை உண்டாக்க கூடும். எனவே கர்ப்பிணிகள் தினசரி குங்குமப்பூவை எடுத்து கொள்வது இது போன்ற பிரச்சனைகளுக்கு வலி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும் அவர்கள் உடலில் இருக்கும் அனைத்து தசைகளையும் ரிலாக்ஸாக வைக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் : கர்ப்ப காலத்தில் நேரத்தில் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் காரணத்தால் ரத்த அழுத்த அளவை பாதிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. கொஞ்சமாக குங்குமப்பூ எடுத்துக் கொள்வது அதிகரித்த ரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. கர்ப்பகாலத்தில் பொதுவான பிரச்சனையாக இருக்க கூடிய ரத்த அழுத்த அளவு சிக்கல்களில் இருந்து கர்ப்பிணிகளை குங்குமப்பூ காப்பாற்றுகிறது.
இதய செயல்பாட்டை அதிகரிக்க :கர்ப்ப காலத்தில் பசி மற்றும் ஜங்க் ஃபுட் ஆகியவை கர்ப்பிணிகளின் கலோரி அளவை அதிகரிக்க செய்கிறது. இதன் மூலம் அவர்களின் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் அவர்களின் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உருவாகிறது. இதை தவிர்க்க குங்குமப்பூ உதவும். தினசரி தேவையான அளவு குங்குமப்பூவை கர்ப்பிணிகள் சாப்பிட்டு வருவது அவர்களது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. தவிர கருவிலிருக்கும் குழந்தையின் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது. உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்யும் குங்குமப்பூ, தமனிகள் அடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கின்றன.கர்ப்பகாலத்தில் ஒவ்வாமை மற்றும் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். தவறாது குங்குமப்பூவை சேர்த்து கொண்டால் பருவகால ஒவ்வாமை, மூச்சு விடுவதில் சிரமம், மார்பு சளி உள்ளிட்ட பலவற்றை எதிர்த்துப் போராடலாம்.