எலுமிச்சை கலந்த தண்ணீர் என்பது எலுமிச்சை சாறு எடுத்து சர்க்கரை கலந்து ஜூஸாக செய்து அருந்துவது மட்டும் அல்ல, எலுமிச்சை பழத்தை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் போட்டு வைத்து அந்த நீரையும் அருந்தலாம். ஏனெனில் பழத்தில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் ஏராளமான மருத்துவ குணங்கள் இடம்பெற்றுள்ளன. எலுமிச்சை நீரை தயாரிக்கும் போது அதனை வேக வைத்தும் தயாரிக்கலாம்.அதாவது, முழு எலுமிச்சையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை டீ, காபிக்கு பதிலாக பருகி வந்தால் சிறந்த உடல் நலன் ஏற்படும்.
செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது : பண்டைய காலங்களிலிருந்து, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை தண்ணீரை பருகி வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். செரிமானம் மற்றும் மெடாபலிசத்தை சீராக வைத்து கொள்ளும். மேலும் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி குடல் சுத்தமாகும். அதிகப்படியான கொழுப்பை எரித்து எடை குறைய துணை புரிகிறது.
சருமத்தை மேம்படுத்துகிறது : எலுமிச்சை பானம் மணம், புத்துணர்ச்சியூட்டும் பானம் மட்டுமின்றி உங்கள் மனநிலையை சீராக்குகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் நல்ல சூடான எலுமிச்சை தண்ணீரை அருந்தி வந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்கி சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : எலுமிச்சை தண்ணீர் அஸ்கார்பிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாக இருக்கிறது. இது உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி நோய்க்கிருமிகளுக்கு எதிரான பாதுகாப்பை உருவாக்குகி காய்ச்சல், குளிர் ஆகியவற்றிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.
இரத்த சோகை தடுக்கிறது : எலுமிச்சை நீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், போலேட், ஃபிளாவனாய்டுகள், வைட்டமின் பி ஆகியவை நிறைந்துள்ளது. இவை நாள்பட்ட அழற்சியைத் தடுக்கின்றன மற்றும் வைட்டமின் சி உணவில் உள்ள இரும்பு சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதை உறுதி செய்கிறது.
சிறுநீரக கற்களைத் தடுக்கிறது : தற்போதைய காலத்தில் ஆண், பெண் இருவருமே சிறுநீரக கற்கள் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது. ஏற்கனவே சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 125 மில்லி எலுமிச்சை சாறு எடுத்து கொண்டால் விரைவில் நல்ல பலனை பெறுவார்கள். இது சிறுநீரில் பி.எச் அளவை அதிகரித்து சிறுநீரகம் ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது.