நம் நல்வாழ்விற்கு முக்கியம் ஆரோக்கியமான இதயம் ஆகும். பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்த கூடியவை இதய பாதிப்புகள் என்பதால், இது சார்ந்த விஷயங்களில் ஒருவர் எப்போதுமே எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இதய நோய்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் சுமார்18 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். இந்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 70 வயதிற்குட்பட்டவர்களில் முன்கூட்டியே நிகழ்வதாக WHO-வின் அறிக்கை கூறுகிறது. மிக பெரிய ஆபத்துகள் ஏற்படும் முன் இதயம் எப்போதுமே சில அறிகுறைகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரிக்கும். ஆனால், பலரும் இந்த எச்சரிக்கையை சீரியசாக எடுத்து கொளவத்தில்லை அல்லது புரிந்து கொள்வது இல்லை. இதயம் வெளிக்காட்டும் எச்சரிக்கைகள் மற்றும் அறிகுறிகளை சரியான நேரத்தில் கவனித்து மருத்துவ சிகிச்சை செய்து கொண்டால் பெரும் ஆபத்துகள் ஏற்படுவதை தவிர்த்து கொள்ள முடியும்.
காரணம்: இதய நோய் ஏற்பட ஆரோக்கியமற்ற உணவு, உடல் உழைப்பின்மை, தூக்கமின்மை, புகையிலை பயன்பாடு மற்றும் அதிகப்படியான மது பழக்கம் உள்ளிட்டவை பல காரணங்களில் முக்கிய காரணங்கள் ஆகும். உயர் ரத்த அழுத்தம், அதிகரித்த ரத்த குளுக்கோஸ், அதிகரித்த ரத்த கொழுப்பு, மற்றும் அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவை இதய கோளாறு ஏற்பட சாத்தியமான ஆபத்து காரணிகளாகும்.புறக்கணிக்க கூடாத இதய பிரச்சினைகளின் பொதுவான அறிகுறிகள்..
மார்பு பகுதியில் அசௌகரியம்.. சிலர் வாயு அல்லது நெஞ்செரிச்சல் காரணமாக வழக்கமாக மார்பு பகுதியில் அசௌகரிய உணர்வை அனுபவிப்பார்கள். ஆனால் புறக்கணிக்க கூடாத அறிகுறிகளில் இது முக்கியமான ஒன்று. அவ்வப்போது ஏற்படும் சில நிமிட மார்பு அசௌகரியம், பல முறை கவனிக்கப்படாமல் போனால் அது இதயத்திற்கான ஆபத்தை அதிகரிக்கும். இந்த அசௌகரியத்தை குறிப்பாக கண்டறிய மார்பில் ஒரு பெரிய பாறாங்கல் இருப்பது போன்ற உணர்வு, சில நேரங்களில் உள்ளே குறுகுறுவென இழுப்பது போலவும் தோன்றும். இது போன்ற அசௌகரியம் நீடித்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
கைகள் மூலம் வலி : இது மாரடைப்புக்கான பொதுவான அறிகுறி. எந்த காரணமும் இல்லாமல், திடீரென்று பயங்கர வலி உங்கள் உடலின் இடது கை மற்றும் இடது தோள்பட்டை பகுதிகளில் ஏற்பட்டால், அது சாதாரண வலியாக இருக்க வாய்ப்பு குறைவு. பெரும்பாலும் மாரடைப்பாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அறிகுறி ஏற்பட்டாலும் புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
லேசான தலை சுற்றல்: சோர்வு அல்லது உடல் பலவீனம் காரணமாக லேசான தலை சுற்றல் ஏற்படுவதாக நினைத்து எத்தனை முறை இந்த அடையாளத்தை புறக்கணித்திருப்போம். ஆனால் இதயத்திற்கு வரும் போது அது சரி இல்லை. ஏனென்றால் இதய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் நம் சமநிலையை இழக்கச் செய்யலாம் அல்லது சிறிது நேரம் மயக்கத்தை ஏற்படுத்தலாம்.
குறட்டை & வியர்வை: உறக்கநிலையில் சிறிது நேரம் குறட்டை விடுவது இயல்பு. ஆனால் வழக்கத்திற்கு மாறாக சத்தமாக குறட்டை விடுவது, மூச்சுத்திணறல் போன்ற ஒலிகள் இதய சிக்கலால் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலின் அறிகுறியாக இருக்கலாம். காரணமின்றி திடீரென அதிகமாக வியர்வை வெளியேறுவது ஹார்ட் அட்டாக்கை குறிக்கும்.