இதயத் துடிப்புகள் ஒவ்வொன்றும் சமமாக, சீராக இருக்க வேண்டும். சில பதட்டமான நேரங்களில், சில பயம் மிக்க சூழ்நிலைகளில் நமது இதயம் ஒழுங்கற்ற முறையில், கண்டபடி துடிக்கும். அதாவது நம் இதயத் துடிப்புகள் திடீரென்று மிகவும் கவனிக்கத்தக்கவைகளாக மாறும். உங்கள் இதயம் சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு அடிக்கடி துடிப்பதையும், படபடப்பதையும் அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிப்பதையும் உணவீர்கள். இதை தான் மருத்துவர்கள் ஹார்ட் பல்பிடேஷன்ஸ் (Heart palpitations) என்கிறார்கள்.
உண்மையில் இது நாம் நினைக்கும் அளவிற்கு இது தீவிரமானது அல்ல, மிகவும் அரிதாகவே சிகிச்சை தேவைப்படும் ஒரு பாதிப்பு ஆகும். இது சில ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக அடிக்கடி நிகழ்கிறது என்பதால் அதில் மாற்றங்களை செய்தால் போதுமானதாக இருக்கும். அவைகள் என்னென்ன? எப்போதெல்லாம் ஹார்ட் பல்பிடேஷன்ஸ் ஏற்படலாம்? எதெற்கெல்லாம் அச்சம் கொள்ள தேவையில்லை? எந்த கட்டத்தில் மருத்துவ உதவி தேவைப்படும்? என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம்: மன அழுத்தம் மற்றும் பதட்டம் - அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். நீங்கள் அவற்றை நிர்வகிக்கத் தவறினால் அது சிக்கலாகிவிடும். கடுமையான உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். கட்டுப்பாடற்ற மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று - ஹார்ட் பல்பிடேஷன். நீங்கள் கடுமையான மன அழுத்தம் அல்லது கவலையை உணரும் போது உங்கள் இதயம் "சீரற்ற முறையில்" துடிக்க ஆரம்பிக்கும். இந்த நிலை 'பேனிக் அட்டாக்'கிற்கும் வழிவகுக்கும்.
ஹார்மோன்ஸ் மாற்றம்: மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் ஹார்ட் பல்பிடேஷன்ஸை உணரலாம். இது ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறது. கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் இது அதிகம் கவனிக்கப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தின் போது ஹார்மோன் ரெகுலேஷன் மற்றும் நேச்சுரல் ரீப்ரொடெக்ஷன் சைக்கிள் ஆனது இதயத் துடிப்பை தற்காலிகமாக அதிகரிக்கலாம் மற்றும் ஹார்ட் பல்பிடேஷனுக்கும் வழிவகுக்கலாம்.
நிகோடின் வித்ட்ராவல்: அதாவது புகைபிடிப்பதை நிறுத்துவது - உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயங்களில் ஒன்றாகும். ஆனால் நிகோடின் வித்ட்ராவல் பல்வேறு அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. தலைவலி, தூக்கமின்மை மற்றும் அமைதியின்மையை தவிர்த்து இது ஹார்ட் பல்பிடேஷனுக்கும் வழிவகுக்கும். நிகோடினை விட்டு வெளியேறிய 3 முதல் 4 வாரங்களுக்குள் வரும் இந்த நிலையை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் விரைவான இதயத் துடிப்பு ஆகியவை நிகோடின் வித்ட்ராவலுக்கான முக்கிய அறிகுறிகளாகும். தவிர அதிகப்படியான காஃபின் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வதும் கூட ஹார்ட் பல்பிடேஷன்ஸை உண்டாக்கும்.
மருந்துகள்: படபடப்பு - நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சில 'ஓவர்-தி-கவுன்டர்' மருந்துகளின் ஒரு பக்க விளைவாகவும் இருக்கலாம். ஆஸ்துமா இன்ஹேலர்கள், இருமல் மற்றும் சளி மருந்துகள் மற்றும் பிறவும் உங்கள் இதயத்தை வேகமாக துடிக்கச் செய்து, படபடக்கச் செய்யலாம். இந்த மருந்துகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொண்டால், ஏற்படும் பக்க விளைவுகள் மற்றும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் கேட்டு வைத்துக்கொள்ளவும். ஆனால் மருந்துகளைத் தவிர்க்க வேண்டாம்.