கடந்த சில மாதங்களாக, உணவுப்பழக்கத்தில் நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே எங்குமே செல்ல முடியாமல் இருந்த சூழலில், பலரும் பல்வேறு உணவுகளை வீட்டிலேயே முயற்சி செய்து பார்த்தனர். அதில், பாரம்பரிய உணவுகள் முதல் நவீன ஃபியூஷன் உணவுகள் வரை இடம்பெற்றன. அவற்றில், முக்கிய உணவு பரோட்டா. அதிகமாக சாப்பிடுவது உடல் நலத்துக்குக் கெடுதல் என்று கூறப்பட்டு வந்தாலும், பரோட்டா பிரியர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதுவும் குளிர்காலத்தில் விருப்பமான உணவை சுடச்சுடச் சாப்பிடுவது யாருக்குத் தான் பிடிக்காது? எடை அதிகரித்து விடுமோ என்ற பயம் இல்லாமல் இனி பரோட்டா சாப்பிடலாம்.
முள்ளங்கி பரோட்டா : பலராலும் பெரிதும் விரும்பப்படாத முள்ளங்கியில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கேல்சியம் மற்றும் வைட்டமின் அதிகம் உள்ள முள்ளங்கி நீரிழிவு, அதிக கொலஸ்டிரால் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு எடை குறைக்க உதவுகிறது. வழக்கமாக பரோட்டா செய்யும் மாவில், முள்ளங்கியைத் துருவி சேர்த்து செய்தால், சுவையாக இருப்பதோடு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வெங்காய பரோட்டா : ஒரு உணவை விதவிதமாக சமைக்க, சுவை கூட்ட உதவுவதில் வெங்காயத்தின் பங்கு இன்றியமையாதது. சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பரோட்டா மாவில் சேர்த்து சமைப்பது பரோட்டாவின் சுவையை அதிகரித்து, ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும். வெங்காயத்தில் கலோரிகள் குறைவு, மினரல்கள் நிறைந்துள்ளது மற்றும் நார்ச்சத்தும் அதிகம். எனவே, நீண்ட நேரத்துக்கு பசிக்காது மற்றும் பரோட்டா சாப்பிட்டால் செரிமானம் ஆகாது என்ற பிரச்சனையும் இருக்காது.
மேத்தி பரோட்டா : வெந்தயக் கீரை பரோட்டா என்பது வட மாநிலங்களில் மேத்தி பரோட்டவாக மிகவும் பிரபலமான ரொட்டி வகையாகும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்துள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படும் கீரை வகைகளில் வெந்தயக் கீரை பிரதானமானது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஃபிளாவனைடு உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கிறது.
வெந்தயக் கீரை பரோட்டாவை பல விதங்களில் சமைக்கலாம். கீரையை அப்படியே பச்சையாகவும் அல்லது வேக வைத்தும் பரோட்டா மாவில் சேர்த்து செய்யலாம். கீரையை அரைத்து, அதனை மாவில் கலந்து பச்சை நிறத்தில் பரோட்டாவை செய்யலாம். இதனை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள். அல்லது, வெந்தயக் கீரையை வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கி, அந்தக் கலவையை பரோட்டா ஸ்டஃப்பிங் ஆகப் பயன்படுத்தலாம்.