உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒருவர் புற்றுநோய் காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவை உள்ளன. புற்றுநோய் ஒரே இரவில் உருவாகுவது இல்லை. இவை ஆரம்பத்தில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரையும் எடுத்துவிடுகிறது.
குறிப்பாக புகையிலைப் பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது, குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது மற்றும் உடல் உழைப்பு இல்லாமை ஆகிய காரணங்களால் தான் புற்றுநோய் செல்கள் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூச்சு விடுவதில் சிரமம், ரத்தம் கலந்த சளி வருவது, நீண்ட நாள் தொடர் இருமல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கலாம். புற்றுநோயைத் தடுக்க உதவும் சில குறிப்புகள்
சால்மன் மீன் : வெங்காயம், பூண்டு, சால்மன் மீன் ஆகியவை புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவு பொருட்களாகும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது. குறிப்பாக சால்மன் மீனில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் இயற்கையாகவே புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தியை பெற்றுள்ளது.
ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி புற்றுநோயை அதிகளவில் எதிர்க்கும் உணவாக கருதப்படுகிறது. இது ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை கொண்டிருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவது நல்லது. இதை வேகவைத்து அல்லது வறுத்து சாப்பிடலாம். ஆனால் வெஜ் சாலட்களில் பச்சையாக சேர்த்து சாப்பிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கிரீன் டீ : பல ஆய்வுகள் கிரீன் டீ குடிப்பவர்களுக்கு கருப்பை, மார்பக, புரோஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து குறைந்துள்ளது என்று கண்டறிந்துள்ளது. கிரீன் டீயில் உள்ள ஈ.சி.ஜி.சி என்ற வேதிப்பொருள் அதிகபட்ச ஆக்ஸிஜனேற்றிகளின் காரணமாக மிகவும் சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு சேர்மங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் இதில் உள்ள சல்ஃபராஃபேன், கெமிக்கலால் உருவாகும் புற்று நோய்களை தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.
சர்க்கரை பானங்கள் வேண்டாம் : சர்க்கரை பானங்கள் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கு காரணமாக இருப்பது மட்டுமல்லாமல், எண்டோமெட்ரியல் புற்றுநோய்க்கும் மிகப்பெரிய காரணமாக இருக்கலாம். சர்க்கரை பானம் பழக்கமுள்ளவர்களுக்கு புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 87 சதவீதம் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
வெயிலில் செல்லாதீர்கள் : தோல் புற்றுநோய் என்பது இந்தியாவில் மிகவும் பொதுவான மற்றும் தடுக்கக்கூடிய புற்றுநோயாகும். வலுவான சூரிய வெளிச்சத்தின் போது வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்ல வேண்டாம். அவசியமான பணிக்காக செல்ல நேரிட்டால் வெயிலில் வெளியேறும்போது சருமத்தை துணி, குடையால் மறைத்து செல்லுங்கள். புற ஊதா கதிர்களை பிரதிபலிக்கக்கூடிய டார்க் நிற உடைகளை அணியுங்கள். கருப்பு நிற உடைகள் வேண்டாம். மேலும் சூரியனில் வெளியே செல்லும் போது எப்போதும் சன்கிளாஸை அணிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ வசதி பெறுங்கள் : புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் உயிரிழப்புகளை தடுக்கலாம். புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.