நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். நம் உடல் மற்றும் மனம் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் பட்சத்தில் இந்த வாழ்க்கைக்கு உத்தரவாதம் உண்டு. இது போல ஆரோக்கியமாக இளமையுடன் காட்சியளிக்க கூடிய நபர்களை பார்க்கும்போது வயது என்பது வெறும் எண் என்ற பழமொழியை பலரும் சொல்வார்கள்.
ஆனால், எதார்த்தம் என்னவென்றால் வயதுக்கும், வயது சார்ந்த நோய்களுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கிறது. இதை நாம் முற்றிலுமாக மறுத்து விட முடியாது. பெரும்பாலும் இன்றைய காலகட்டத்தில் 30 வயது முதலே பல நோய்களுக்கான அபாயங்கள் தொடங்கி விடுகின்றன. ஆகவே, இந்த சமயத்தில் நம் உடல் நலன் தொடர்பான வாடிக்கையான பரிசோதனைகளை அவ்வபோது செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களுக்கு இவை அவசியமாகிறது.
இதய நல பரிசோதனை : உங்கள் இதயம் எப்போதாவது ஒரு நொடி துடிக்க மறந்திருக்கலாம். ஆனால், இதை நீங்கள் சாதாரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. சீரற்ற இதயத்துடிப்பு, நீடித்த சோர்வு, மிகுதியான கவலை போன்றவற்றை நீங்கள் அலட்சியம் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு இதய நோய்கள் வெகு இயல்பாக தாக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.
நீரிழிவு பரிசோதனை : நீரிழிவு இன்று பலருக்கு இருக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமான வாழ்வியல் நடைமுறை மற்றும் தினசரி உடற்பயிற்சி போன்றவற்றின் மூலமாக நீரிழிவு அபாயத்தை தடுக்க முடியும் என்றாலும் கூட, பல வகையிலும் எப்படியாவது இது நம்மை பாதித்து விடுகிறது. இருப்பினும் நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு உள்ளிட்ட பல அபாயங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, இரத்த குளுக்கோஸ் பரிசோதனை, ஹெச்ஏஒன்சி பரிசோதனை போன்றவற்றை செய்ய வேண்டும்.
தைராய்டு பரிசோதனை : பெண்களை மட்டுமே அதிகமாக தாக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக தைராய்டு பிரச்சனை இருக்கிறது. தைராய்டு குறைபாடு இருக்கும் பட்சத்தில் அவர்களது மெட்டபாலிச நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும். இதனால் திடீரென உடல் எடை அதிகரிப்பது, எண்ண ஓட்டங்கள் தடுமாறுவது, மிகுதியான உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆகவே, உங்கள் தொண்டை பகுதியில் அமைந்துள்ள தைராய்டு சுரப்பி முறையாக வேலை செய்கிறதா என்பதை ரத்த பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
கர்ப்பபை புற்றுநோய் பரிசோதனை : 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. பாப் ஸ்மியர் பரிசோதனை மூலமாக இதை நீங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த பரிசோதனையை நீங்கள் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி சீரற்றதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.