ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதும், அதை தொடர்ந்து தினசரி செய்வதாலும் பல உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இந்த லாக்டவுன் சமயத்தில் பலரும் கேம் விளையாடுவது, படம் பார்ப்பது, வீட்டில் அலுவலகப் பணி போன்ற காரணங்களுக்காக நீண்ட நேரம் ஆம்ர்ந்தே இருப்பார்கள். அப்படி அமர்வதால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்று பார்க்கலாம்.
இதயக் கோளாறுகள் ஏற்படும்: அதிக நேரம் அமர்வதால் ஏற்படும் பேராபத்துகளில் முதலில் பாதிக்கப்படுவது இதயம் தான். ஏனெனில் நாம் அதிக நேரம் அமர்ந்திருக்கும் போது கெட்டக் கொழுப்புகள் கரைவது குறைந்துவிடும். அந்த கெட்டக் கொழுப்புகள் ரத்தக் குழாய்களில் தேங்கி நின்றுவிடும். அதன் விளைவு இதயத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் வரும்.
உடல் தோற்றம் சீரற்று போகும் : ஒரே மாதிரியான நிலையில் நேராக அப்படியே அமர்ந்திருப்பதால் முதுகுத் தண்டு பாதிப்படையக் கூடும். இதனால் உடல் தோற்றம் சீரற்ற நிலையை அடைந்துவிடும். உங்கள் உடல் தோற்றம் நீங்களே வெறுக்கும் அளவிற்கு மாறிவிடும். வீட்டில் லேப்டாப் அல்லது கணினியை நோக்கி தலையை குனிந்தவாறோ, நிமிர்ந்தோ அமர்ந்தாலும் இந்தப் பிரச்சனை வரும்.
மூளை பாதிப்படையும்: அதிக நேரம் அமர்வதால் உடல் மட்டுமல்ல மூளையும் பாதிப்படையும். சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் அதிக நேரம் உட்கார்ந்து அலுவலகப் பணி செய்தாலும், மற்ற எந்த வேலைகளை செய்தாலும் நிஞாபக மறதி அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. மூளையில் நினைவுத் திறனை அதிகரிக்கச் செய்யும் நரம்புகள் விரைவில் பாதிப்படைகிறதாம். இதனால் புதிதாக நாம் சேகரிக்கும் நினைவுகளை அழித்துவிடுகிறதாம்.
நீரிழிவு நோய் வரலாம்: இன்று நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கும் உடல் ஆற்றல்கள் அற்ற வாழ்க்கை முறைதான் காரணமாக இருக்கிறது. இதை வைத்து நார்வெயின் பல்கலைக்கழகம் நடத்திய ஹண்ட் என்கிற ஆராய்ச்சியில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வோருக்கு நீரிழிவு நோய் அதிகரிப்பதாகக் கண்டறிந்துள்ளது. நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு நிச்சயம் வரக் கூடும் என்றும் எச்சரிக்கிறது.
வெரிகோஸ் நோய் அதிகரிக்கும் (நரம்பு சுருக்க நோய்): அதிக நேரம் அமர்ந்திருப்பதால் கால் வலி அதிகமாகும். இதன் தொடர்ச்சியாக கால் நரம்புகளில் வீக்கம் ஏற்படும். இதனால் வெரிகோஸ் எனப்படும் நரம்பு சுருட்டல் நோய் வரும். இன்று பலரும் இந்த நோயால் அவதிப்படுகின்றனர். அதற்கும் உடல் ஆற்றல் இல்லாத வேலைகள் அதிகரித்திருப்பதேக் காரணம்.
நீங்கள் அதிகபட்சமாக பெரிதாக எதுவும் செய்ய வேண்டாம். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடக்கலாம். 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கைக் கால்களை வீசுங்கள். இடுப்பை இருபுறமும் வலையுங்கள். முடிந்தால் சிம்பிள் உடற்பயிற்ச்சி ஏதேனும் செய்யுங்கள். இவ்வாறு செய்வதால் மேலே குறிப்பிட்ட நோய்களிலிருந்து விலகி இருக்கலாம்.