உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மனச்சோர்வு என கடந்த இரண்டு ஆண்டுகளில் இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே வயதானால்தான் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்றில்லை. இப்போதிலிருந்து கவனம் செலுத்த முயல்வது சிறந்தது. அந்த அவகையில் வரும் ஆண்டில் உங்கள் ஆரோக்கியத்தில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தலாம் என பார்க்கலாம்.
ஆரோக்கியமான உணவு : பாதி நோய் நம் உணவுப் பழக்கம் ஆரோக்கியமாக இல்லாததாலேயே நிகழ்கிறது. குறிப்பாக உடல் பருமனிற்கு இதுதான் முதல் காரணம். எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் ஃபுட்ஸ் போன்ற வெளியில் வாங்கி சாப்பிடக் கூடிய உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என உறுதிமொழி எடுங்கள். ஆரோக்கியமான உணவுகளை, வீட்டுச் சாப்பாடுதான் சாப்பிட வேண்டும் என முடிவெடுங்கள். பச்சை காய்கறிகள் , கீரை வகைகள், பழங்கள் , முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
உடற்பயிற்சி : உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறையைதான் இன்றைய இளைஞர்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதுவும் அவர்களுக்கு வரக்கூடிய நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே உடல் உழைப்பு என்பதை உடற்பயிற்சி மூலம்தான் ஈடுகட்ட முடியும். எனவே குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்து உடலுக்கு அசைவு கொடுங்கள். சூரிய வெளிச்சத்தை காணுங்கள். நடைப்பயிற்சி, ஜாகிங் செய்யுங்கள்.
நீர்ச்சத்து : இன்றைய அவசர வாழ்க்கைமுறையால் மனிதனுக்கு தண்ணீர் குடிக்கக் கூட நேரமில்லை. அதனால்தான் தண்ணீர் அருந்துவதற்கென்று ஆப்ஸ் கூட வந்துவிட்டன. எனவே வரும் ஆண்டிலிருந்து குறைந்தபட்சம் அந்த ஆப்ஸுகளை பயன்படுத்தியாவது தண்ணீர் குடிக்க மறவாதீர்கள். நீங்கள் மறந்தாலும் அந்த ஆப்ஸ் உங்களுக்கு நினைவூட்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி : உடல் ஆரோக்கியம் என்பது உணவை அடிப்படையாகக் கொண்டது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துகள், கனிமச்சத்துகள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், மினரல், கால்சியம், ஃபோலிக் அமிலம், இரும்பு, குரோமியம், மெக்னீசியம் , பொட்டாசியம் என உங்கள் உணவுகளை ஊட்டச்சத்து மிக்க வளமான உணவாக மாற்றுங்கள். இந்த உறுதி மொழியில் எப்போதும் நிலையாக இருங்கள்.