குளிரின் குதூகலத்தை நாம் அனுபவிக்கும் அதே சமயத்தில், அதன் எதிர் விளைவுகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். ஆயுர்வேத சிகிச்சை முறைகளும் இதைத்தான் பரிந்துரை செய்கின்றன. ஆயுர்வேத சிகிச்சை என்ற உடன் பெரிய அளவுக்கு மூலிகைகளை தேடி, தேடி சிகிச்சை எடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.சாதாரணமாக நம் பாட்டி கொடுக்கும் சிகிச்சை முறைகளை ஒட்டியே இதுவும் அமைந்துள்ளது. குளிர் காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, பல சிக்கல்களில் இருந்து நம்மை காப்பதாக இவை அமையும். அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.
மஞ்சள் பால் : தமிழர்களின் கலாச்சாரத்தில் முதன்மையான இடம்பெற்றுள்ள மஞ்சளின் மகத்துவம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்றாலும், இந்த தருணத்தில் அதன் பலன்களை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஆண்டிஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்த மஞ்சள் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக் கூடியதாகும். இரவு தூங்க செல்லும் முன்பாக பாலில் ஒரு சிட்டிகை அளவு மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தலாம். ஏற்கனவே சளி பிடித்துள்ளது என்றால் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் : நம்மை சுற்றியுள்ள சூழல் குளுமையாக இருந்தாலும், நமது சருமம், தலை ஆகியவற்றில் வறட்சி காணப்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் காலை குளித்து முடித்த பிறகு கை, கால்கள் மற்றும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். தேங்காய் எண்ணெய் பனியில் உறைந்து போய் இருக்கும். வாரம் ஒருமுறை வெயிலில் வைத்து எடுத்து இலகுவாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது அடுப்பின் அனல் அருகே வைத்து இலகுவாக மாற்றலாம்.
நல்லெண்ணெய் மசாஜ் : குளிர் காலத்தில் மிகுந்த உடல் வலி, சோம்பல் போன்ற பிரச்சினைகள் நம்மை தாக்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது நம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தருவதாக அமையும். வாரம் ஒருமுறை மட்டும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் இதை செய்தால் போதுமானது. நல்லெண்ணெய் மிகுந்த குளிர்ச்சி தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜலதோஷம், சைனஸ் போன்ற பிரச்சினை இருப்பவர்கள் இதைத் தவிர்க்க வேண்டும்.
சூடான உணவு : இதமான குளிரை அனுபவிக்கவும், உடலை வெதுவெதுப்பாக வைத்துக் கொள்ளவும் நீங்கள் சாப்பிடும் அனைத்தும் சூடாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். குளிர் காலத்தில் டீ, காஃபி பானங்களுக்குப் பதிலாக காய்கறி அல்லது ஆட்டுக்கால் சூப் அருந்துவது இன்னும் நல்ல அனுபவமாக இருக்கும். குளிர் நேரத்தில் ஆறிய உணவுகளை சாப்பிட்டால் உணவு மீது சலிப்பு தட்டும். ஆகவே, உணவுகள் சுடச்சுட இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.