மாறிவரும் வாழ்வியல் சூழலால் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பதை எல்லாம் நாம் பெரிய அளவில் பின்பற்றுவதில்லை. இதனால் பல்வேறு பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பது நாம் அறிந்தது தான். ஆனால், இவற்றை செய்வதால் உடலுக்கு பெரிய நோய்கள் எதுவும் வராது என்கின்றனர் மருத்துவர்கள். பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும், சிறிய அளவில் நடைப்பயிற்சி செய்தால் கூட நல்லது தான். குறிப்பாக சாப்பிட்ட பின் நடைப்பயிற்சி செய்வதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். இவற்றை பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
எதிர்ப்பு சக்தி : உடலில் நோய்களை எதிர்த்து போராட கூடிய முக்கிய பகுதி இந்த எதிர்ப்பு சக்தி மண்டலம் தான். செரிமானம் சீராக நடந்தாலே எதிர்ப்பு சக்தி மண்டலமும் சீராக வேலை செய்யும். எனவே இதற்கு தினமும் சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செய்து வந்தால் போதும். இப்படி செய்வதால் நச்சுக்களை வெளியேற்றி, உட்புற உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்க முடியும். இதனால் எதிர்ப்பு சக்தியும் கூடும்.
நொறுக்கு தீனிகள் : பலர் இரவு உணவு சாப்பிட்ட பிறகும் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதுண்டு. இது மிகவும் மோசமான பழக்கமாகும். எனவே இதை தடுக்க இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி செல்லுங்கள். இது போன்று 15 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்தால் நொறுக்கு தீனிகள் சாப்பிட கூடிய எண்ணம் வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம் : இன்றைய கால கட்டத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதர்களே இல்லை என்று சொல்லலாம். ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோருக்கும் பல்வேறு மனநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. எனவே மன அழுத்தம் இல்லாமல் இருக்க இரவு சாப்பாட்டிற்கு பிறகு நடைப்பயிற்சி செய்யுங்கள். இதனால் எண்டோர்பின் என்கிற மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரந்து மனநிலையை சீராக வைக்கும்.